

மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக, தவெக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமன், பிலாப்பூர் பகுதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடையே பணப்பெட்டியைக் காண்பித்து, இதற்காகத்தான் இடைத்தேர்தல் வந்தது எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் சுந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்துக்கு உப்பட்ட விநாயகர்நல்லூர், வேடந்தாங்கல், வளையபுத்தூர், வெள்ளபுத்தூர், சித்தத்தூர், கரிக்கிலி, பாப்பநல்லூர், எல்.எண்டத்தூர், தீட்டாளம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திறந்த வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, 2011 முதல் 2016 வரை மதுராந்தகம் எம்எல்ஏவாக இருந்தபோது மதுராந்தகம் தாலுகா அலுவலகம், மதுராந்தகம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மதுராந்தகம் ஒன்றியத்தில் கத்திரிச்சேரி மேம்பாலம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் தண்டர்பேட்டை மேம்பாலம், எல்.எண்டத்தூர் சுகாதார நிலைய கட்டிடம், ஜமீன் எண்டத்தூர் சுகாதார நிலைய கட்டிடத்தில் 30 படுக்கை வசதி கொண்டது மாற்றி அமைத்துள்ளேன். ரூ.10 கோடிக்கு மேல் நலத்திட்ட பணிகளைச் செய்துள்ளேன். இது மட்டுமில்லாமல் அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.
இதேபோல், ஆளுங்கட்சியான தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஒரத்தி, பெரும்பேர் கண்டிகை, கடமலை புத்தூர் ஆகிய கிராமப்பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுகந்தி, மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் அரிவாள் சுத்தி சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.