

மதுரை பாண்டி கோயில். (கோப்புப்படம்)
மதுரை: மதுரை பாண்டி கோயிலை முழுமையாக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை பாண்டி கோயில் பரம்பரை பூசாரி உரிமை தொடர்பாக அறநிலையத் துறை பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளுக்கு எதிராக கோயில் பூசாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் தனி நீதிபதி 2024-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சீதாலெட்சுமி, தனம், பாண்டீஸ்வரி, ஆர்த்தி, ஜெகதீஸ்பாண்டியன் ஆகியோர் உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.
இதை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மதத்தை செல்வம் சேர்க்கும் போர்வையாக கருதக்கூடாது. பண பலனுக்காக பக்தியை வளர்க்கவும் முடியாது.
மதுரையின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் பாண்டி முனீஸ்வரர் கோயில் பூசாரிகள், கடவுளுக்குச் சேவை செய்யாமல் தங்களின் சொந்த ஆதாயத்துக்காகவும், ஆடம்பர வாழ்வுக்காகவும் பக்தர்களின் தட்டு காணிக்கையையும், உண்டியல் வசூலையும் பிரிப்பதற்காக தங்களுக்குள் சண்டையிடுகின்றனர். இப்பிரச்சினையால் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு மதச்சூழல் மாசுபடுத்தப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கோயிலில் தட்டு வசூல் ஆண்டுக்கு ரூ.1 கோடியை தாண்டுவதாகவும், உண்டியல் வசூல் ஆண்டுக்கு குறைந்தது ரூ.4 கோடி வரை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த பணம் கோயில் கணக்கில் வரவு வைக்காமல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்டியல் வசூல் பூசாரியின் தனிப்பட்ட உரிமை அல்ல.
அது பக்தர்களின் நம்பிக்கையால் குவியும் பொதுவான வளம். அந்த வளத்தை தங்களின் குடும்ப சொத்தின் வருமானம் என்பது போல் பங்கு கேட்டு சண்டையிடுவது வேதனையானது.
அர்ச்சகர் வாழ்வாதாரத்துக்காக உண்டியல் வசூலில் ஒரு தொகை வழங்குவது வாரிசுரிமை அளிக்காது. இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுதாரர்கள் உட்பட தனி நபர்கள் யாரும் கோயிலில் பரம்பரை பூசாரியாக உரிமை கோர முடியாது.
பரம்பரை அறங்காவலர்களை நீக்குவது தொடர்பாக அறநிலையத் துறை 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும். கோயில் நிர்வாகத்தை முழுமையாக அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.