‘மதுரை வடக்கு தொகுதியே இலக்கு’ - மாநில பொறுப்பாளரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் கொந்தளிப்பு

‘மதுரை வடக்கு தொகுதியே இலக்கு’ - மாநில பொறுப்பாளரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் கொந்தளிப்பு

படம்: நா.தங்கரத்தினம்

Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டத்தில் வடக்கு தொகுதியை கட்டாயம் கேட்டுப் பெற வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசமாக பேசினர். மதுரையில் நேற்று காங் கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிகள் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.

இதற்கு மதுரை மாவட்டத் தலைவர்கள் பூ.நல்லமணி (மாநகரம்), நூர்முகம்மது (வடக்கு), உலகநாதன் (தெற்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா பங்கேற்று நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தார்.

ஒவ்வொரு நிர்வாகிக்கும் ஒரு நிமிடம் மட்டும் பேச அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது பேசிய நிர்வாகிகள் அனைவரும் ஆவேசமாக பேசினர். இதில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன.

இதில் ஒரு எம்எல்ஏவோ, எம்பியோ கிடையாது. கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை உழைத்தது போதும். இம்முறை ஒரு தொகுதியையாவது கட்டாயம் கேட்டுப் பெற வேண்டும். மதுரை வடக்கு தொகுதியே இலக்காக இருக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில் மூன்று மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். அவர்கள் போட்டியிடுவதற்கேற்ப 3 தொகுதிகளாவது வேண்டும். இல்லாவிட்டால் கட்டாயம் ஒரு தொகுதியாவது கேட்டு பெற வேண்டும்.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற, கட்சிக்கு செல்வாக்குள்ள மதுரை வடக்குத் தொகுதியை தொகுதிப் பங்கீட்டில் கட்டாயம் கேட்க வேண்டும் என்றனர். தற்போது மதுரை வடக்குத் தொகுதியில் திமுகவின் மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி சிட்டிங் எம்எல் ஏவாக உள்ளார்.

இவர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். இதற்கு எதிர்வினையாற்றிய மாணிக்கம் தாகூர் எம்பியும் மதுரை வடக்குத் தொகுதியை கட்டாயம் கேட்போம் என்றார்.

இந்நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் மதுரை வடக்கே இலக்கு என காங்கிரஸ் கட்சியினர் ஒருமித்த குரலில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என அறிவித்தனர். அதனை தொடர்ந்து பெண்கள் சேலைகளை பெற முண்டியடித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

‘மதுரை வடக்கு தொகுதியே இலக்கு’ - மாநில பொறுப்பாளரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் கொந்தளிப்பு
“திமுக மிரட்டல்களால்தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை” - ஆதவ் அர்ஜுனா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in