

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஆர்.வி.கதிர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: 'கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது. இந்த திட்ட அறிக்கையை மத்திய அரசு திரும்பி அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு விடுத்த அறிக்கையில், ‘மெட்ரோ ரயில் கொள்கையின்படி 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களில் பெருமளவு பொது போக்குவரத்து திட்டங்களை தொடங்கலாம். ஆனால் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதுரை நகரத்தின் மக்கள் தொகை சுமார் 15 லட்சம் மட்டுமே. மெட்ரோ திட்டங்கள் அதிக செலவு வாய்ந்தவை. அதோடு நீண்ட காலம் நிலைத்த தன்மையோடு இருக்க வேண்டும் என்பதால் கவனமாக திட்டமிடப்பட வேண்டும்.
ஆகவே குறைந்த மக்கள் தொகை உடைய நகரங்களுக்கு குறைந்த செலவில் செயல்படுத்தப்படும் பிற நகர போக்குவரத்து திட்டங்கள் பொருத்தமானவை. இதன் காரணமாக கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சுமார் 14 ஆண்டு முந்தைய கணக்கெடுப்பு. மதுரை மாவட்டத்தில் தற்போது 27 லட்சத்து 29 ஆயிரத்து 671 வாக்காளர்கள் உள்ளனர். அவ்வாறெனில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சுற்றுலா பயணிகள், பதிவு செய்யப்படாத குடியிருப்பு வாசிகள் ஆகியோரையும் சேர்த்தால் மதுரையின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் அதிகமாகவே இருக்கும்.
எனவே மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை முறையாக சரி செய்து மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசுக்கும், தமிழக அரசின் திட்ட அறிக்கை பரிசீலித்து மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிடுகையில், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்றார்.
அப்போது நீதிபதிகள், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. சில விளக்கங்கள் கேட்டு திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது மனுதாரர் கேட்ட நிவாரணத்தை எப்படி வழங்குவது? எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.16-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.