

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று நடைபெற்ற யாகசாலை பூஜை .
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறும் செப். 17-ம் தேதி சித்திரை வீதிகளில் பக்தர்கள் நின்று விழாவைப் பார்க்க மாநகர் காவல்துறை தடை விதித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா செப்.17-ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க ‘பாஸ்’ பெற்ற 2 ஆயிரம் பக்தர்கள் 9 ஆயிரம் விஐபிக்கள் உள்பட மொத்தம் 11 ஆயிரம் பேரை மட்டும் விழாவுக்கு கோயிலுக்குள் அனுமதிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குடமுழுக்கு விழா காலை 7.40 முதல் 8.10 மணிக்குள் நடக்கிறது. அதற்கு முன்பே, விழாவில் பங்கேற்க ‘பாஸ்’ பெற்றவர்கள் மட்டும் சித்திரை வீதிகள் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ‘பாஸ்’ பெறாத மற்ற பக்தர்கள், சித்திரை வீதிகளில் நடமாட கோயில் நிர்வாக அறிவுறுத்தலின்பேரில் மாநகர் காவல்துறை தடை விதித்துள்ளது.
குடமுழுக்கு விழாவில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்பிக்க கோயில் நிர்வாகம் முறையாக அறிவிக்கவில்லை. ‘பாஸ்’ விண்ணப்பம் பெறும் ஆன்லைன் ‘லிங்க்’ நேற்று முன்தினம் இரவு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. நேற்று காலை முதல் செயல்படாததால், பக்தர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்த 14 ஆயிரம் பேரில் குலுக்கல் முறையில் வெறும் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே‘பாஸ்’ வழங்கப்படுகிறது.
மற்ற அனைவரும் அரசியல் கட்சியினர், உபயதாரர்கள், விஐபிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே விஐபிக்கள் ‘பாஸ்’களுடன் கோயிலுக்குள் செல்கிறார்கள். குடமுழுக்கு விழா நேரத்தில் கோபுரத்தில் இருந்து நான்கு திசைகளிலும் ‘ட்ரோன்’ மூலம் தீர்த்தம் தெளிக்கப்படும். இதற்காக ‘பாஸ்’ இல்லாத பக்தர்கள் சித்திரை வீதிகளில் திரள்வர். ஆனால், தற்போது அதற்கும் காவல்துறை தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கோயில் நிர்வாகத் தரப்பில் விசாரித்தபோது, “குடமுழுக்கைத் தரிசிக்க கோயில் கோபுரத்தின் மேல் தளத்தில் அனுமதிக்கப்படுகிறவர்கள், விழா முடிந்து வெளியே சென்ற பிறகு, நிலைமையைப் பொருத்து மற்ற பக்தர்கள் காவல்துறையால் சித்திரை வீதிகளில் அனுமதிக்கப்படுவர்" என்றனர்.
கோயில் முடிவே நடைமுறை: மாநகர் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாஸ் பெறாத பக்தர்கள் குடமுழுக்கு விழா நடக்கும் நேரங்களில் கோயிலுக்குள் ஆடி வீதி பகுதியிலும், கோயிலுக்கு வெளியிலுள்ள சித்திரை வீதிகளிலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்குப் பதிலாக ஆவணி மூல வீதிகளில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் முடிவையே நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம். இவ்வாறு தெரிவித்தார்.