

மதுரையில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை பராமரிக்க, ரூ.10 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் இல்லாமல் வீணாகும் நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு ரூ.10 லட்சம் மதிப்பிலான இயந்திரம் வழங்க வேண்டும் எனவும், மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகத்தை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மதுரையில் முதல்முறையாக ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை நடந்தன. இதற்காக, ரூ.10 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி மைதானமும், ரூ.10 கோடியில் பார்வையாளர்கள் அரங்கமும் அமைக்கப்பட்டன.
இது முக்கிய பிரமுகர்கள் அமர்ந்து பார்க்கும் அறைகள், 300 பேர் அமரும் பார்வையாளர்கள் அரங்கு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தை பராமரிக்க, ரூ.10 லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இந்த இயந்திரம் இல்லாமல் மைதானம் வீணாகும் நிலை உள்ளது. மேலும், கட்டிடங்கள் பயன்படுத்தாமல் வீணாவதை தடுக்கும் வகையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகத்தையும் புதிய கட்டிடத்துக்கு மாற்றவேண்டும் என ஹாக்கி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஹாக்கி வீரர்கள் கூறியதாவது: மதுரையில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைத்து உலக கோப்பை போட்டிகள் நடத்தியது வரவேற்கத்தக்கது. ஆனால், ரூ.10 கோடியில் அமைத்த மைதானத்தை பாதுகாக்க ரூ.10 லட்சம் மதிப்புள்ள தூய்மைப்படுத்தும் கிளீனிங் இயந்திரம் வேண்டும். சென்னையில் அந்த இயந்திரம் உள்ளது.
மதுரையில் அந்த இயந்திரம் இல்லை. அதை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும், விளையாட்டரங்க வளாகத்திலுள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகத்தை புதிய கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளோம். மைதானத்தை தூய்மைப்படுத்த கிளினீங் இயந்திரம் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளோம், என்றனர்.