

மதுரை: அனைத்து மாவட்டங்களிலும் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பி.ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மதுப்பழக்கம் சமூகத்தைப் பெரிதும் பாதிக்கிறது. மதுவுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட, தாலுகா தலைமை மருத்துவமனைகளில் மது ஒழிப்பு மறுவாழ்வு மையங்களை திறக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டுக்கு ஒருமுறை சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என குறிப்பிட்டிந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘மதுப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மதுவால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கல்வி அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி தற்போது 25 அரசு மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் 25 மையங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாவட்டங்களிலும் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.