

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் அவமதிப்பு மனுக்களை தனி நீதிபதி விசாரிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு விதித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், காவல் துணை ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அவமதிப்பு மனுக்களை விசாரித்த தனி நிதிபதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இதற்கு எதிராக அரசு தரப்பிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் வீராகதிரவன், ரவீந்திரன் ஆகியோர், ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்த பிறகும் தனி நீதிபதி தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்.
டிச.4 உத்தரவுக்கு தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு அவமதிப்பு நடவடிக்கைக்கும் தடை விதிக்கவில்லை என்று கூறி தனி நீதிபதி விசாரணையை நாளைக்கு (ஏப்.9) தள்ளிவைத்துள்ளார்’ என்றனர்.
தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மோகன், வாஞ்சிநாதன் ஆகியோர், ‘திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதி, தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான பொருளுடன் நீதிபதி இணைந்துவிட்டார். எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை அந்த நீதிபதி விசாரிக்கக் கூடாது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்கா நிர்வாகம் மீதும் வழக்கு பதிவு செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றனர்.
பின்னர் நீதிபதிகள், ‘இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இதில் அவசரம் காட்ட முடியாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். இது சிறிய பிரச்சினை, ஊதி ஊதி பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. மேல்முறையீடு மனு மீது இரு நீதிபதிகள் ஏற்கெனவே இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதன் பிறகும் தனி நீதிபதியின் உத்தரவை மிகைப்படுத்துவது ஏன்? இந்த வழக்கில் நீதிமன்றத்தில் யாரும் குரலை உயர்த்தி பேசி நீதிமன்றத்தை மிரட்டும் நோக்கத்தில் பேசக் கூடாது. இந்த வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்கப்படும்.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்த பிறகு, தனி நீதிபதி விசாரிக்க முடியாது. அந்த வழக்கு தானாக இரு நீதிபதிகள் அமர்வுக்கு வந்துவிடும்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி விசாரிக்க வேண்டுமா அல்லது இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பதை இந்த நீதிமன்றம் விசாரித்து உரிய முடிவெடுக்கும் வரை திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீது தனி நீதிபதி பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.