“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை ஆட்சியர், எஸ்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும்” - ஹெச்.ராஜா கருத்து

ஹெச்.ராஜா | கோப்புப்படம்
ஹெச்.ராஜா | கோப்புப்படம்
Updated on
1 min read

காரைக்குடி: திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றத்தை அவமானப்படுத்திய மதுரை ஆட்சியரும், எஸ்.பி.யும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பை வரவேற்று காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான கட்சியினர் இன்று பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியது: “தீபத்தூண் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு நன்றி.

இந்த விஷயத்தில் மதப் பிரச்சினையோ, சட்டம் - ஒழுங்கு பிரச்சினையோ ஏற்படவில்லை. அரசியல் உள்நோக்குடன் அரசு செயல்பட்டது ஏற்புடையதல்ல என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் மனு அளித்தது உள்நோக்கம் என்பது தெரிகிறது.

டிச.1-ம் தேதியே தீபம் ஏற்ற அனுமதித்திருக்கலாம். அதை தடுத்தது முட்டாள்தனம். இனியாவது தீபம் ஏற்ற வேண்டும். தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரனின் தியாகத்துக்காக கிடைத்த நீதியாக தீர்ப்பைக் கருதுகிறேன்.

தமிழக அரசு இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல், தீர்ப்பை செயல்படுத்த வேண்டும். இந்துகள் எப்போதும் வன்முறையாளர்கள் அல்ல. ஆனால், கொள்கையில் உறுதியாக இருந்து வெற்றி பெறுவார்கள். இனியாவது தமிழக அரசு சட்டத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும். சட்டத்தை மீறி, நீதிமன்றத்தை அவமானப்படுத்தியது தொடர்பாக மதுரை ஆட்சியரும், காவல் ஆணையரும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

“அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” - இதனிடையே, பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சட்ட அமைச்சர் ரகுபதி, நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் பேசியுள்ளார். தீர்ப்பு எப்படி வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிக்கு அறிவுரை கூறும் வகையில் பேசுவது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது. புனிதமான தீபத்தூணையும், கோயிலையும், சுடுகாட்டுடன் ஒப்பிட்டுப் பேசியது மன்னிக்க முடியாத குற்றம்.

சிறுபான்மை வாக்கு வங்கிக்காக பிரிவினைவாத அரசியலை அரசு முன்னெடுத்து வருகிறது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று அமைச்சர் கூறுவது, மதவாத அரசியலின் வெளிப்பாடாகும். நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் கேள்விக்குறியாக்கிய அமைச்சர் ரகுபதியை முதல்வர் ஸ்டாலின், உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும். தமிழக அரசு தீர்ப்பை ஏற்று, மேல்முறையீடு செய்யும் முடிவைத் திரும்பப் பெற்று, மத நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா | கோப்புப்படம்
கூட்டணியில் சலனப் புயல்... சமாளிக்குமா திமுக?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in