பாலஸ்தீனத் ஆதரவு கோஷம்: 14 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

பாலஸ்தீனத் ஆதரவு கோஷம்: 14 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது மட்டுமே சட்டவிரோதம் ஆகிவிடாது என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக 14 பேருக்கு எதிராக பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையை கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த ஆண்டு அக்டோபரில் சட்டவிரோதமாகக் கூடி, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக கூடலூரைச் சேர்ந்த முகமது என்பவர் உள்பட 14 பேருக்கு எதிராக கூடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முகமது உள்ளிட்ட 14 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையை கண்டித்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்காக போலீஸார் எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாகவும், உலகில் நிகழும் இதுபோன்ற சம்பவங்களை கண்டித்து குரல் கொடுக்க மனிதராகப் பிறந்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து காவல் துறை தரப்பில், இந்த வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர் என்ற ஒரு குற்றச்சாட்டைத் தவிர அவர்கள் மீது வேறு எந்த குற்றச்சாட்டும் இல்லை. மற்றவர்களுக்கு இடையூறாக செயல்பட்டனர் எனக் கூறுவதற்கும் ஆதாரங்கள் இல்லை. மேலும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது மட்டுமே சட்டவிரோதம் ஆகிவிடாது என தெரிவித்து 14 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

பாலஸ்தீனத் ஆதரவு கோஷம்: 14 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
கல்வி உரிமைச் சட்டம்: வருமான உச்சவரம்பை நிர்ணயிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in