

குமரி மதுமிதா
நாகர்கோவில்: சீதை, ஜெயலலிதாவை மேற்கோள் காட்டி வெளியிட்ட வீடியோவால் யூடியூபர் மதுமிதா மீண்டும் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.
நாகர்கோவிலை அடுத்த தம்பத்துக்கோணத்தை சேர்ந்தவர் மதுமிதா (29). யூ டியூபரான இவர் தனது பெண் குழந்தையுடன் நின்று ரூபாய் நோட்டுக்களையும், தங்க நகைகளையும் கொட்டி வெளியிட்ட வீடியோ அவரை பிரபலப்படுத்தியதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியான சில நாட்களில், இவரது வீட்டில் 118 பவுன் நகைகள் திருடப்பட்டன. மேலும், பாளையங்கோட்டையைச் சேர்ந்த முதியவர் ஒருவரது தங்க நகையைப் பறித்ததாக மதுமிதா மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அடுத்தடுத்த சர்ச்சைகளால் மதுமிதா தம்பத்துக்கோணத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தலைமறைவானார். அத்துடன், அவர் சமூக வலை தளங்களில் வீடியோவும் பதிவிடவில்லை. இந்நிலையில் அவர், ‘நான் வந்துட்டேன்...’ என்ற ரீதியில், கடந்த இரு தினங்களாக வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
தனது குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இதை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் சீதை, ஜெயலலிதா ஆகியோரை மேற்கோள் காட்டி பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
ஒரு வீடியோவில் மதுமிதா பேசியிருப்பதாவது: “சீதையையே தீக்குளிக்க வைத்தீர்கள். அதன் பிறகும் அவரை யாரும் நம்பவில்லை. என்னைப் பற்றி பேசப்பேச நான் உயர்ந்துகொண்டே தான் இருப்பேன். ஒரு பெண் நன்றாக இருந்தால் அந்த குடும்பத்தை எப்படி வீழ்த்தலாம் என்று நினைக்கிறீர்கள். ஒருபோதும் அது நடக்காது.
நானும், என் கணவர், குழந்தையும் நன்றாகவே இருப்போம். எங்களை யாராலும் அழிக்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எவ்வளவு அவதூறாக பேசினார்கள். ஆனால் அவர் இரும்பு மனிதராக நிமிர்ந்து நின்றார். தனது குழந்தையை விட ஒரு மதிப்பெண் அதிகமாக எடுத்த மாணவரையே கொன்ற போட்டியுள்ள உலகம் இது” என, அவர் பேசியுள்ள வீடியோவால் மீண்டும் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.