மடப்புரம் காவலாளி கொலையில் டிஎஸ்பி உள்பட 4 பேர் கைதுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மடப்புரம் காவலாளி கொலையில் டிஎஸ்பி உள்பட 4 பேர் கைதுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
Updated on: 
1 min read

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி காவல் மரண வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, டிஎஸ்பி உள்பட 4 பேர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார். இவரை நகை திருட்டு வழக்கு தொடர்பாக, தனிப்படை காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தனிப்படை காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து தனிப்படை காவலர்கள் 6 பேரை கைது செய்தது. பின்னர், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இந்த 4 பேரும் கைதாகாமல் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.

இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானபோது, 4 பேரையும் நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தங்களை சிறையில் அடைக்குமாறு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சண்முகசுந்தரம், ரமேஷ்குமார், சிவக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி முருகன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த எங்களை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதை மீறி எங்களை கைது செய்து சிறையில் அடைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.

அஜித்குமார் தரப்பில், மனுதாரர்களை விடுதலை செய்தால் சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபடுவர் எனக் கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

மடப்புரம் காவலாளி கொலையில் டிஎஸ்பி உள்பட 4 பேர் கைதுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஊழலை மூடி மறைக்க முயன்ற விஜய் சர்க்காருக்கு உயர் நீதிமன்றம் சவுக்கடி: திமுக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in