

ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் | கோப்புப் படம்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட பதிவுகளை நீக்கி விடுவதாக, ஜாய் கிரிசில்டா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார். இதை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜாய் கிரிசில்டாவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்திருந்த பிரதான வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ரங்கராஜுக்கு எதிரான பதிவுகளில் தேவையில்லாமல், தங்கள் நிறுவனத்தின் பெயரை இணைத்ததால், நிறுவனத்துக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த பதிவுகளை நீக்க வேண்டும் என மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும், தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை பதிவிட ஜாய் கிரிசில்டாவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜாய் கிரிசில்டா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபிகா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிடப்பட்ட பதிவுகளை இரண்டு வாரங்களில் நீக்கி விடுவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தார்.
மேலும், இருவருக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்தியஸ்தரை நியமிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது மூத்த வழக்கறிஞர் பெயரை பரிந்துரைக்கும்படி, இரு தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதி, ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை, பிப்ரவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.