

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கோம்பேரி கோம்பை பகுதியில் சாலை அமைக்கக் கோரும் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஆய்வு செய்தார்.
தருமபுரி: ஜனநாயகத்துக்கு பொருந்தாத உடல்மொழிகளை முதல்வர் விஜய் தவிர்க்க வேண்டும், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து தெரிவித்தார்.
தருமபுரியில் நடந்த தொழிற்சங்க இணைப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்க வேண்டும். கோம்பேரி கோம்பை வழியாக பொம்மிடி செல்வதற்கான சாலையை விரைந்து அமைக்க வேண்டும். காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் கர்நாடகா புதிய அணையை கட்டினால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் கிடைக்காது.
இந்த நடவடிக்கையை கண்டித்து, வரும் 13-ம் தேதி கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
தமிழர்களும், கன்னடர்களும் சகோதரர்களாக உள்ளனர். தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமைக்கு எதிராக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. தமிழக மக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும்.
மத்திய அரசின் கொள்கை: களால் பல தொழில்கள் நெருக்கடிக்கு உள்ளாகி தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் காக்க இந்தியா முழுவதிலும் ஆகஸ்ட் 6 முதல் 15 நாட்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய கொடியை ஏந்தியபடி நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கும் தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளில் மலையாளம் பேசும் மக்கள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டும். ஈரான் மீது போர் தொடுக்கும் அமெரிக்காவை எதிர்த்து பிரதமர் மோடி குரல் கொடுக்க வேண்டும். கரூர் சம்பவம் குறித்து முதல்வர் சட்டப்பேரவையில் பேசியிருக்க வேண்டும்.
வாக்கு மை காயும் முன்பாக மக்கள் பிரதிநிதிகள் கட்சி தாவுவது ஜனநாயகத்தின் மீதான நெருக்கடி ஆகும். தமிழக முதல்வர் புதியவர். அவரிடம் இருந்து இன்னும் அதிகமான திட்டங்கள், கொள்கைகளை நாடு எதிர்பார்க்கிறது. ஜனநாயகத்துக்கு பொருந்தாத உடல்மொழிகளை முதல்வர் விஜய் தவிர்க்க வேண்டும்.
தேர்தலில் கட்சிகளின் வெற்றி,தோல்விகள் இயல்பானவை. ஆனால், மதவாத சக்திகளை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். கரூர் நிகழ்ச்சியில், லஞ்சம் கூடாது என முதல்வர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. பலரின் உழைப்பை சிலர் சுரண்டுவது நல்லதல்ல. ஆனால், 40 ஆண்டுகால குறைகளை சரிசெய்ய சற்று அவகாசம் தேவைப்படும். கடந்த ஆட்சி காலத்தில், இந்தியாவிலேயே சமூக நல திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது.
கடந்த ஆட்சிகால திட்டங்கள் விருப்பு,வெறுப்பின்றி தொடர வேண்டும். தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியின்போது, கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தேவராசன், மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், ஏஐஒய்எப் மாவட்ட செயலாளர் நவீன்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.