தமிழகத்தில் தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
Updated on: 
1 min read

சென்னை: ‘தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழகம் இருக்கிறது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில், ‘‘சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். காணாமல்போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழகம் இருக்கிறது. சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதல்வர் ஏன் மவுனமாக இருக்கிறார்?. சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?" என தெரிவித்துள்ளார்.

உதயநிதி, கனிமொழி கண்டனம்

உதயநிதி ஸ்டாலின்: அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில் மே 4-ம் தேதிக்குப் பிறகு சட்டம் - ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக்கூட இல்லை. இன்றைய கொலைப் பட்டியல் என்று நாளிதழ்களில் தனி பகுதி போடும் அளவுக்கு தினந்தோறும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன.

சேலத்தில் ரவுடி டேவிட், சாத்தான்குளத்தில் ஒரு பெண், ஸ்ரீவைகுண்டத்தில் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட தவெக பெண் நிர்வாகி ஒருவர், கணவனை கொன்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் டிராக்டர் ஓட்டி, டீ குடித்து, முருங்கை பறித்த முதல்வர், சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக் கூட்டமாவது நடத்துவாரா? அவரது ஆசியோடுதான் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா

கனிமொழி எம்.பி: மதுரை மேலூர் அருகே காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.

‘விஜய் மாமா’ என்று அழைத்து உங்களுக்கு வாக்கு கேட்ட குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால், காவல் துறையை முதல்வர் கையில் வைத்திருந்து என்ன பயன்? இதேபோல் ஸ்ரீவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவமும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின் றன. எனவே, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்திவிட்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: நேரு தாக்கல் செய்த மனு தள்ளுபடி - நீதிமன்ற உத்தரவால் சிக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in