

சென்னை: ரேஷன் கடைகள் உள்ளிட்ட கூட்டுறவு விற்பனை மையங்களில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், சோப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை சந்தை விலையை விட சுமார் 20 சதவீதம் வரை குறைவான விலைக்கு விற்பனை செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.
அக்டோபரில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தேவையான பொருட்களை வெளிப்படைத் தன்மையுடன் கொள்முதல் செய்ய, புதிய இணையவழிக் கொள்முதல் முறை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கூட்டுறவு மையங்கள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது.
அதன்படி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், சோப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சந்தை விலையைவிட சுமார் 20 சதவீதம் வரை குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளன. ரேஷன் கடைகள் உட்பட கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலம் இந்த பொருட்களை மக்கள் வாங்கலாம். அனைவரும் பயன்பெற ஏதுவாக, பொருட்கள் வாங்க வரன்முறையும் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
புதிய கொள்முதல் முறையில் கூட்டுறவுச் சங்கங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளிடம் இருந்து தேவையான பொருட்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். குறிப்பாக, விவசாயிகளிடம் இருந்து வெல்லம், பூண்டு, மிளகு, கடுகு, சீரகம், புளி, வெந்தயம் உள்ளிட்ட பொருட்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, விற்கப்படும். இத்திட்டத்தை அக்டோபர் முதல் செயல்படுத்த பரிசீலித்து வருகிறோம். அரசின் அனுமதி கிடைத்ததும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.