

சென்னை: ரயில் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 20 சிறப்பு இலவச பேருந்துகள் சேவையை ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. அதேபோல், கடற்கரை - தாம்பரம் இடையே 15 பெட்டிகள் கொண்ட 10 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணி காரணமாக, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகளின் வசதிக்காக, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 60-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையில் ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்காக, தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து கடற்கரைக்கும், கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கும் தலா 20 சிறப்பு இலவச பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு இலவச பேருந்துகளின் சேவையை ரயில்வே நிர்வாகம் இன்று தொடங்கியது.
அதேபோல், கடற்கரை - தாம்பரம் இடையே 15 பெட்டிகள் கொண்ட 10 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் தாம்பரம், மாம்பலம், கிண்டி, எழும்பூர் ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இந்த ரயில் நிலையங்களில் மட்டுமே, 15 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நிறுத்தும் வசதி இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.