

அருண்பாண்டியன்
ராமநாதபுரம்: பரோலில் வந்து அந்தமான் தப்பிச் சென்ற ஆயுள் தண்டனை கைதியை ராமநாதபுரம் போலீஸார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சடையன்வலசையைச் சேர்ந்த ஆனந்தன் மகன் அருண்பாண்டியன் (32). இவர் கடந்த 2017-ம் ஆண்டு முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக மதுரை மத்திய சிறையில் இருந்து வந்தார்.
இந்நிலையில், நீதிமன்ற அனுமதியின்படி கடந்த செப்.11 முதல் அக்.2-ம் தேதி வரை பரோல் விடுப்பில் சொந்த ஊரான சடையன்வலசைக்கு வந்துள்ளார்.
இவர் மீண்டும் அக்.2-ம் தேதி மதுரை மத்திய சிறையில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அருண்பாண்டியனை தேடி வந்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்ததில் அருண்பாண்டியன் அந்தமான் தப்பி சென்றது தெரியவந்தது.
அதனையடுத்து, தனிப்படையினர் அந்தமான் சென்று அருண்பாண்டியனை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.