

சென்னை: “சமத்துவ இலக்கை நோக்கி சமூகநீதிப் பாதையில் சுயமரியாதையோடு நடைபோடுவோம்” என பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரியாரின் பிறந்தநாள் மற்றும் சமூகநீதி நாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை - அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “சமத்துவ இலக்கை நோக்கி சமூகநீதிப் பாதையில் சுயமரியாதையோடு நடைபோடுவோம்” என தெரிவித்துள்ளார்.
பின்னர், அண்ணா அறிவாலயத்தில், சமூகநீதி நாள் உறுதி ஏற்றார்.
முன்னதாக அவர் பகிர்ந்த மற்றுமொரு பதிவில், “தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம். பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன. ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது. பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.
ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட. வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள். “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்” எனக் குற்ப்பிட்டிருந்தார்.