

சிவகங்கை: தமிழகத்தில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை 1,500-ல் இருந்து 2,500 ஆக அதிகரித்த நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அந் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பாததால் சிக்கல் எழுந்துள்ளதாக சுகாதார ஆய்வாளர்கள் புகார் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வட்டார அளவில் தொழுநோய் ஒழிப்புப் பணிகளை மருத்துவமில்லா மேற்பார்வையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தொழுநோய் பரவல் குறைந்தது. மேலும் சுகாதார ஆய்வாளர்களுக்குப் பதவி உயர்வு மூலம் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. காலப்போக்கில் அப்பணியிடங்களை நிரப்பாமல் விட்டனர். இதனால், தற்போது மாநிலம் முழுவதும் 408 பணியிடங்களில் 210 இடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக தொழுநோயாளிகள் எண்ணிக்கை சத்தமில்லாமல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2020-21-ம் ஆண்டு 1,500 ஆக இருந்த தொழுநோயாளிகள் எண்ணிக்கை தற்போது 2,500 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ப.குமார் கூறுகையில், தொழுநோய் பாதிப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் மற்றவர்களுக்கு பரவக் கூடிய தொழுநோயும் உள்ளது.
இச்சூழலில் இந்நோயை வட்டார அளவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால், தொழுநோய் ஒழிப்பில் தீவிரம் காட்டாமல்,தற்போது மருத்துவமில்லா மேற்பார்வையாளர் பணியிடங்களையே ஒழித்து வருகின்றனர். ஏற்கெனவே கூடுதலாக பணிப் பளுவில் இருக்கும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்களையே அப்பணிகளையும் கவனிக்க பொது சுகாதாரத்துறை நெருக்கடி கொடுத்து வருகிறது.
தொழுநோய் ஒழிப்புப் பணியில் தொய்வுதான் ஏற்படும். சுகாதார ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வும் பாதிக்கப்படும். இதை கண்டித்து ஜூலை 16 முதல் பணி புறக்கணிப்புப் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.