“திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள்” - பெ.சண்முகம்

“திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள்” - பெ.சண்முகம்
Updated on: 
1 min read

தாராபுரம்: “தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள்தான்” என்று மா.கம்யூ மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தாராபுரம் புதுக்காவல் நிலைய வீதியில் இன்று (செப்.29) இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: தவெக தரப்பில் இருந்து எந்தவிதமான எதிர்பார்ப்புகளும், உறுதிமொழியும் அளிக்கப்படாமல்தான் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் 2 பெண்களும் ராஜினாமா செய்தார்களா என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய்யோ அல்லது மற்ற அமைச்சர்களோ அதற்கு பதில் சொல்லவில்லை. மீண்டும், மீண்டும் அவர்கள் சொல்வது திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சித்தது என்கின்றனர். சொல்லப்போனால் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள்தான். ஏனென்றால் சட்டப்பேரவையில் பெரும்பான்மை தொடர்பான வாக்கெடுப்பு முடிந்ததற்கு பின்னர் தான் தவெகவில் இணைந்துள்ளனர்.

ஆட்சி அமைக்க பெரும்பான்மையில்லாமல் விஜய் தேடிக்கொண்டிருந்தபோது அவர்கள் வந்திருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆட்சி அமைத்து சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு பல நாட்கள் கழித்துத்தான் இருவரும் வருகிறார்கள். ஆகவே, தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் இரு பெண்களும், முதல்வர் விஜய், மற்ற அமைச்சர்களும் சொல்வது வடிகட்டிய பொய்யாகும்.

இந்தத் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவது என்று தீர்மானித்தோம். நம்மை எதிர்த்து 3 அணிகள் களத்தில் உள்ளது. திமுக, தவெக, அதிமுக-பாஜக என 3 அணிகளும் இடதுசாரிகளை எதிர்த்துப் போட்டியிடுகின்றனர். இதில், அதிமுக-பாஜக கூட்டணியை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறோம். வெறுப்பு அரசியலை நாடு முழுவதும் பரப்பி மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தியது பாஜக. ஆகவே, அத்தகையை கட்சியுடன் உடன்பாடு செய்து கூட்டணியாக தொடர்ந்து பயணித்து வருகிறது.

இந்தக் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்று கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதற்கு முன்பாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வலிமையாகப் போராடியவர்கள் இடதுசாரிகள்தான் என்பதை நான் இங்கு பெருமையுடன் குறிப்பிடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

“திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள்” - பெ.சண்முகம்
தவெகவை நெருங்கும் பாமக - இடைத்தேர்தலுக்குப் பின் கூட்டணிக் கணக்குகள் மாறுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in