ஆர்டிஐயில் சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களை பெற முடியாத வகையில் அரசாணை: இடதுசாரிகள் கண்டனம்

ஆர்டிஐயில் சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களை பெற முடியாத வகையில் அரசாணை: இடதுசாரிகள் கண்டனம்
Updated on: 
2 min read

சென்னை: தமிழ்நாடு அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை தர வேண்டியதில்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டதற்கு இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை தர வேண்டியதில்லை என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஜனநாயகத்திற்கும், வெளிப்படை தன்மைக்கும் எதிரானது. ஏற்கனவே பல்வேறு தகவல்களை தரவேண்டியதில்லை என்று பல அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது சட்ட ஒழுங்கும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

மத்தியில் இடதுசாரிகளின் ஆதரவோடு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த காலத்தில் இடதுசாரிகளின் தொடர் நிர்ப்பந்தத்தால் "தகவல் பெறும் உரிமைச் சட்டம்" கொண்டுவரப்பட்டது என்பது வரலாறு.

தமிழ்நாட்டின் பொது (சட்டம் - ஒழுங்கு) துறை இந்த சட்டத்தில் இருந்து விதி விலக்கு பெறுவது காவல் நிலைய உயிரிழப்புகள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் மக்களின் கவனத்திற்கு வருவதை தடுக்கும்; இது மனித உரிமைகளுக்கு பேரபாயத்தை உருவாக்குவது ஆகும். மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் உள்ளிட்ட தகவல்களும் இதில் அடங்குமெனில், அது அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள போராட்ட உரிமைகளை நசுக்க முயற்சிப்பது ஆகும்.

தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழான தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொருந்துமென்பது ஏற்கெனவே எதேச்சாதிகார ஆயுதமாக பயன்படும் அச்சட்டத்தை மேலும் கூர்தீட்டவே செய்யும். மத, சாதி மோதல்கள் குறித்த தகவல்களுக்கு விலக்கு அளிக்கப்படுவது பிற்போக்கான சக்திகளால் பயன்படுத்தப்படக் கூடும். எதை வேண்டுமானாலும் சட்டம் - ஒழுங்கு என்ற வரையறுக்குள் கொண்டு வந்து தகவல்களை மறுக்க முடியும். இது எதேச்சதிகாரமானதும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும்.

அண்மைக் காலங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களில் காவல்துறை அத்துமீறல்கள் மிகக் கடுமையாக வெளிப்பட்டன. கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் காவல்துறை நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டது. "கண்காணிப்பு அரசாக" பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படுகிற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் போராட்ட உரிமைகள் ஒடுக்கப்படுவதன் நீட்சியாகவே இந்த அரசாணையும் அமைந்திருக்கிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே ஆகும். சாமானிய மக்களின் கைகளில் ஆயுதமாக திகழக் கூடிய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் முனையை மழுங்கச் செய்யும் இத்தகைய அரசாணை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இது எதேச்சதிகார, பிற்போக்கு, ஜனநாயக விரோத, மனித உரிமை மறுப்பு போக்குகளுக்கே வழி வகுக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது.’எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டம்-ஒழுங்கு தொடர்பான பல முக்கிய விவரங்கள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறமுடியாத வகையில், தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை மூலம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து பொது சட்டம்-ஒழுங்கு துறைக்கு அரசு விலக்கு அளித்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

சட்டம்-ஒழுங்கு பிரிவின் கீழ் மதம் மற்றும் சாதி மோதல்கள் தொடர்பான விவகாரங்கள், சட்டம்-ஒழுங்கு தொடர்பான விசாரணை ஆணையங்களை அமைத்தல் மற்றும் அவற்றின் பரிந்துரைகள் மீதான தொடர் நடவடிக்கைகள் உள்ளிட்டவை கையாளப்படுகின்றன.

தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் தடுப்புக் காவல் நடவடிக்கைகள், தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பிரதிநிதித்துவ மனுக்கள், அவர்கள் சார்பில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆட்கொணர்வு மனுக்கள் போன்றவைகள் சட்டம் - ஒழுங்கு நிர்வாகத்தில் வருகின்றன

சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் நடத்துதல், காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பான விசாரணை அறிக்கைகளைப் பரிசீலித்தல், காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்கள், காவல்துறை சித்ரவதை மற்றும் ரிமாண்ட் கைதிகளின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடர்பான விவகாரங்கள், சட்டம்-ஒழுங்கு மற்றும் வகுப்புவாத சம்பவங்கள் குறித்த மாதாந்திர அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்புதல், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தல் ஆகிய பணிகளும் இடம்பெறுகின்றன.

மாணவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டோரின் போராட்டங்கள் தொடர்பான விவகாரங்கள், அரசியல் காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரும் மனுக்கள், மதம் மற்றும் சாதி மோதல்கள், அரசியல் மற்றும் மாணவர் போராட்டங்கள் உள்ளிட்டவையும் சட்டம்-ஒழுங்கு பிரிவால் கையாளப்படுகின்றன.

அவதூறான கட்டுரைகள், செய்தி அறிக்கைகள், பேச்சுகள் உள்ளிட்டவற்றுக்காக வழக்குத் தொடர்வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரங்களும் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றன. தமிழ்நாடு அரசின் அரசாணை நடைமுறைக்கு வந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் குறித்த விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது எனில், அது அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கும், ஏதேச்சதிகார போக்கிற்குமே வழி வகுக்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

பாஜக - ஆர்எஸ்எஸ் கடைபிடிக்கும் நடைமுறைகளை தவெக அரசும் கடைபிடிப்பது ஏற்புடையதல்ல. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து சட்டம் ஒழுங்கு நிர்வாகத்திற்கு விலக்களிக்கும் ஜனநாயக விரோத அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்டிஐயில் சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களை பெற முடியாத வகையில் அரசாணை: இடதுசாரிகள் கண்டனம்
“என் வாழ்நாளில் வேதனையான நிகழ்வு நடந்த நாள்” - முதல்வர் விஜய் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in