

சென்னை: அதிமுகவின் கட்சி நிலைப்பாடு குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு தலைமையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுகவின் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியோடு அதிமுக கட்டுக்கோப்பான இயக்கமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கட்சியின் கருத்துகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த நிலைப்பாடுகள் தொடர்பாக கட்சித் தலைமையின் அனுமதி பெற்ற பின்னரே பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கவும், கருத்து தெரிவிக்கவும் வேண்டும்.
அதேபோல், அறிக்கை ஏதேனும் வெளியிடுவதாக இருந்தால், கண்டிப்பாகத் தலைமையின் ஒப்புதலைப் பெற்ற பிறகே வெளியிட வேண்டும். நிர்வாகிகள் அனைவரும் இந்த உத்தரவை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.