

சென்னை: தமிழ்ப் புத்தாண்டு அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற உதவ வேண்டும் என, குடியரசு துணைத் தலைவர், ஆளுநர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்: சர்வதேச நாள்காட்டியை இன்று நாம் பின்பற்றும் அதே வேளையில், நாட்கள், மாதங்கள், வருடங்களுக்கும் தனித்துவம் வாய்ந்த பெயர்களை சூட்டும் நமது பாரம்பரிய தமிழ் நாள்காட்டியையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நம் முன்னோர் நமக்கு வழங்கிய ஞானம் தான் நமது பாரம்பரியம். அதை நாம் பாதுகாத்து வரும் தலைமுறைகளிடம் கொண்டு செல்ல வேண்டும். இயற்கை வளங்களுக்கு நம் மக்கள் அளிக்கும் மரியாதை, புத்தாண்டின் மற்றொரு முக்கிய அம்சமாகும். நம் முன்னோரின் ஆசிகளுடன் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் வெற்றி பெறுவதை நோக்கி நமது இளம் தலைமுறையினர் முன்னேற வேண்டும்.
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: சூரியனின் சுழற்சியை அடிப்படையாக கொண்ட நாட்காட்டியை பயன்படுத்தும் நாம், சூரியன் மேஷராசியில் நுழையும் நிகழ்வை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடி வருகிறோம். தமிழகத்தில் தமிழ் வருடப் பிறப்பு, கேரளத்தில் விஷூ, அசாமில் பிஹூ, பஞ்சாபில் பைசாகி என பல்வேறு பெயர்களில் இந்நிகழ்வானது நாடெங்கிலும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பருவங்கள் மாறுவது போல் நாம் நம்மை அவ்வப்போது மாற்றி அமைத்துக் கொண்டு சுமுகமான, நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: புதிய சாதனைகள் பலவற்றைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, அமைதியான வாழ்வைப் பெறுவோம், வளமான தமிழ் நாட்டைப் படைப்போம் என இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இந்த தமிழ்ப் புத்தாண்டு அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற உதவ வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் மலரட்டும் திராவிட மாடல் நல்லாட்சி என்ற உணர்வுடன் தமிழ்் பெருமக்களுக்கு சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்: தமிழர்களுக்கு சித்திரை வருடப்பிறப்பு வசந்த காலத்தின் தொடக்கமாக அமைந்து தொன்மையாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் அடியெடுத்து வைக்கும் தமிழக மக்களுக்கு இனி வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: சித்திரை மாதத்தின் தொடக்கமான இந்நாள் தமிழர்களின் வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் நிறைவதன் தொடக்கமாக அமைய வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பாரம்பரியமிக்க பழமையிலும், தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையற்ற பண்பாட்டுப் பெருமைமிக்க தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து வரவேற்கும் இந்த தமிழ்ப் புத்தாண்டு, மக்கள் அனைவருக்கும் நல்ல மாற்றங்களையும், புதிய ஏற்றங்களையும் தரும் ஆண்டாக அமையட்டும்.
ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளமுடன் இந்த ஆண்டு அனைவருக்கும் மிகச் சிறப்பாக அமைய உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழக பாஜக நிர்வாகி சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.