அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை பக்ரீத் திருநாள் அளிக்கட்டும்: தலைவர்கள் வாழ்த்து

அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை பக்ரீத் திருநாள் அளிக்கட்டும்: தலைவர்கள் வாழ்த்து
Updated on
2 min read

சென்னை: பக்ரீத் பண்டிகை, அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை அளிக்கட்டும் என்று ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி வருமாறு:

ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்: இந்த தியாக திருநாள் பகிர்வு, பரிவு, ஒற்றுமை மற்றும் சமரசம் ஆகிய மனப்பான்மைகளை ஏற்கத் தூண்டி, நமது பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தை ஒன்றிணைத்து வைத்திருக்கும் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்லெண்ணம் மற்றும் புதிய நம்பிக்கையை அளிக்கட்டும்.

முதல்வர் விஜய்: இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு, மனிதநேயம் ஆகிய உயரிய விழுமியங்களை மனிதகுலத்துக்கு உணர்த்தும் புனிதப் பெருநாளாக பக்ரீத் திகழ்கிறது. ஏழை, எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பக்ரீத்திருநாளில் சமுதாயத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் தழைத்தோங்க வேண்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பக்ரீத் திருநாளில், என்றென்றும் என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள், அவர்களது வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன்: முஸ்லிம்களின் பண்டிகைகளில் பக்ரீத் பெருநாள், தியாகத் திருநாள் என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் இதயங்களைத் திறந்து, அனைத்தையும் சிறிது நேரம் மறந்து இறைவனிடம் பிரார்த்திப்போம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழகம் எப்போதும் மதச்சார்பற்ற தன்மையையும், ஒற்றுமையையும் உயர்வாக மதித்து வருகிறது. அந்த நல்லிணக்க மரபு என்றும் நிலைத்திருக்க இந்த புனிதநாளில் அனைவரும் உறுதி மொழி ஏற்க வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமயநல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

பாமக தலைவர் அன்புமணி: உலகம் முழுவதும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒற்றுமை, மகிழ்ச்சி, வளம் உள்ளிட்டவை செழிக்க வேண்டும் என்று கூறி பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: இஸ்லாமிய மக்கள் அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிடச் சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு வாழ நாம் உறுதியேற்போம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தியாகத்தையும், ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மையையும், மனிதநேயத்தையும் வலியுறுத்துகிறது பக்ரீத் பெருநாள். இஸ்லாமிய மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருந்து ஆட்சி செய்ய வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: எத்தகைய சூழலும் நம்மை நிலைகுலைய வைக்கக் கூடாது. இறைதூதர்கள் இப்ராஹீம், இஸ்மாயீல் போன்று சோதனையான சூழலை எதிர்கொண்டு வீரியமாக மக்கள் பணிகளை மேற்கொள்ள, நம்மை தியாகம் செய்திட உறுதியெடுப்போம்.

எஸ்டிபிஐ கட்சி மாநிலதலைவர் முகமது முபாரக்: மக்களிடையே அன்பும், பரஸ்பர பாசமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரவும்; உலகெங்கும் அமைதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் மதநல்லிணக்கம் தழைத்தோங்கவும் இறை வனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

இதேபோல பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் நாகூர் ராஜா, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவிபச்சமுத்து உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை பக்ரீத் திருநாள் அளிக்கட்டும்: தலைவர்கள் வாழ்த்து
தமிழ்த்தாய் வாழ்த்து முதல் மேகேதாட்டு வரை: மோடியிடம் விஜய் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in