வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ராமரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
தீபம் ஏற்றச் சென்ற மனுதாரர் மற்றும் பாஜகவினர், இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீஸாரால் தடுக்கப்பட்டனர். நீதிபதியின் இந்த தீர்ப்பை கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பாஜக, இந்து முன்னணி மற்றும் சார்பு இயக்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வழக்கறிஞர்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாகவும், அவரது தீர்ப்பை விமர்சித்த மதுரை எம்பி சு.வெங்கடேசன் மற்றும் மாநில அரசுக்கு எதிராகவும், ‘நீதித்துறையின் மாண்பை காப்போம், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் வரை விடமாட்டோம்’ என கோஷம் எழுப்பினர்.
வழக்கறிஞர்கள் மலையேந்திரன், அருண் சுவாமிநாதன், கோகுல், மகாராஜன், தங்கதுரை, ஜெயந்தி, பொன்னுத்தாய், சுதாராணி, காந்தியம்மாள் உள்பட 70-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.