

எடப்பாடி பழனிசாமி
சென்னை: “கணவனைப் பிரிந்து வாழ்ந்து வரும் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து 6 மாதங்களாக தொடர் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி வரும் வானூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளரை உடனடியாகக் கைது செய்திட வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 54 மாத கால திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டில் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. காவல் துறையின் செயல்பாடுகள் முற்றிலுமாக செயலிழந்துவிட்டது. இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம், திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த, கணவனைப் பிரிந்து வாழ்ந்து வரும் பெண் ஒருவர், தன்னை வானூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து 6 மாதங்களாக தொடர் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி வருவதாகத் தெரிவித்து அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து, தன்னைக் காப்பாற்றுமாறு அப்பெண் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ள காவல் துறை, ஆட்சி அதிகாரத்திற்கு பயந்து திமுக பொறுப்பாளரை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, குற்றச் செயலில் ஈடுபட்ட திமுக பிரமுகர், தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட அப்பெண்ணை பல்வேறு வகைகளில் துன்புறுத்தி, அச்சுறுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சிறுவர்கள், இளம் பெண்கள் முதல் முதியவர்கள் வரை நாள்தோறும் பல்வேறு வகைகளில் சிரமங்களை சந்தித்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். திமுக ஆட்சியாளர்களின் இத்தகைய அடாத செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் பல்வேறு பதவிகளை வகித்து வரும் திமுகவினர், சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருவதை கண்டும் காணாமலும் இருந்து வருவதோடு, அவர்களைக் காப்பாற்றுவதிலும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் குறியாக இருந்து வருகிறார். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வர உள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், வானூர் ஒன்றியம், திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த, கணவனைப் பிரிந்து வாழ்ந்து வரும் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து 6 மாதங்களாக தொடர் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி வரும் வானூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளரை உடனடியாகக் கைது செய்திட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு மற்றும் உரிய நிவாரணம் வழங்கிடவும் வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளைக் காப்பாற்றுகின்ற செயல்களில் ஈடுபட்டு வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், 27.11.2025 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில், ஒருங்கிணைந்த ஒன்றிய, நகர, பேரூராட்சிகளின் தலைமை இடங்களில் ஆங்காங்கே மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
விழுப்புரம் நகரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் தலைமையில் நடைபெறும்.
திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், கழக நிர்வாகிகள், மகளிர், பொதுமக்கள் அனைவரும் ஆங்காங்கே பெருந்திரளான கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.