

நீலகிரி மாவட்டம் ஓதனட்டி கிராமத்தில் கட்டுமானப் பணியின்போது மண்ணில் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் ராணுவத்தினர்.
குன்னூர்: ஓதனட்டி கிராமத்தில் கட்டுமானப் பணிகளுக்காக குழி தோண்டியபோது 40 அடி உயரத்திலிருந்து மண் சரிந்து விழுந்ததில் வடமாநிலத் தொழிலாளர் 3 பேர் மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாக விதிகளை மீறி அதிக அளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முத்துகிருஷ்ணன் என்பவரின் இடத்தில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. அவரது நிலம் பள்ளத்தில் இருப்பதால், 40 அடிக்கு தடுப்புச் சுவர் கட்ட மண் தோண்டும் பணி நடந்து வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் முசிராபாத் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதே இடத்தில் தங்கி பணியாற்றி வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் நசீர் உசேன்(24), அப்துல் ரகுமான்(24), உஸ்மான்(40) உட்பட 5 தொழிலாளர்கள் பணிகளை மேற்கொண்டனர். திடீரென 40 அடி உயரத்திலிருந்து மண் சரிந்தது. இருவர் அங்கிருந்து ஓடி தப்பிய நிலையில், நசீர் உசேன்(24), அப்துல் ரகுமான்(24), உஸ்மான்(40) ஆகியோர் மண்ணுக்குள் புதைந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஒருவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள், சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
மற்ற இருவரை மீட்கும் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, மண் அகற்றும் பணி நடைபெற்றது. பின்னர் இருவரது உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
முன்னதாக, சார் ஆட்சியர் சங்கீதா, காவல் துணை கண்காணிப்பாளர் ரவி, முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு உள்ளிட்டோர் உடல்கள் மீட்கும் வரை அங்கிருந்து, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “நில உரிமையாளர், பணி ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். பணிகளுக்காக உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும்” என்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் 33 டிகிரி சரிவுக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுமான விதிகளை அப்பட்டமாக மீறி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.