அன்று பொன்முடி... இன்று ஜனகராஜ்! - ‘லட்சியத்துடன்’ காய்நகர்த்தும் லட்சுமணன்

அன்று பொன்முடி... இன்று ஜனகராஜ்! -  ‘லட்சியத்துடன்’ காய்நகர்த்தும் லட்சுமணன்
Updated on
1 min read

அதிமுக வரவான லட்சுமணன் எம்எல்ஏ-வுக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியை ஓராண்டுக்கு முன்பு வழங்கியது தலைமை. பொறுப்புக்கு வந்ததுமே மாவட்ட திமுக மூத்த முன்னோடியான பொன்முடியையும் அவரது மகன் கவுதம சிகாமணியையும் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டிய லட்சுமணன், விழுப்புரம் மத்திய மாவட்டப் பொருளாளரான ஜனகராஜையும் தற்போது ஓரங்கட்டும் பட்டியலில் சேர்த்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

விழுப்புரம் நகராட்சியில் இரண்டு முறை சேர்மனாக இருந்தவர் ஜனகராஜ். அதனால் ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் ரொம்பவே பரிச்சயமானவர். அனைத்துத் தரப்பினரிடமும் ஓரளவுக்கு நற்பெயரைச் சம்பாதித்து வைத்திருப்பவர். இதற்கு முந்தைய தேர்தல்களில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கனவு இவருக்குள் இருந்தது. ஆனால், அப்போது ஆதிக்கத்தில் இருந்த பொன்முடியின் கரிசனப் பார்வை படாததால் இவரது எம்எல்ஏ கனவு கனவாகவே கலைந்து போனது.

இந்த நிலையில், லட்சுமணனுக்குப் பதிலாக இம்முறை வேறொருவரை விழுப்புரத்தில் நிறுத்தலாமா என்று திமுக தலைமை யோசிப்பதாகத் தெரிகிறது. அதனால் ஜனகராஜுக்குள் மீண்டும் எம்எல்ஏ கனவு துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. இதைத் தெரிந்து கொண்ட லட்சுமணன், அவரை மெல்ல ஒதுக்கி வருவதாகச் சொல்கிறார்கள்.

விழுப்புரம், வானூர் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்கு பொறுப்புக் குழு உறுப்பினராகவும் இருக்கும் ஜனகராஜை, விழுப்புரம் நகராட்சியை தாண்டி வெளியே எங்கும் லட்சுமணன் அழைத்துச் செல்வதில்லையாம்.

லட்சுமணனின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவர் மீது அதிருப்தியில் இருக்கும் ஜனகராஜ், அண்மைக்காலமாக லட்சுமணனுடன் வெளிவட்டாரத்தில் ஒன்றாக தலைக்காட்டுவதை தவிர்த்து வருவது விழுப்புரம் திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளுவர் தின நிகழ்ச்சிகளில் பொன்முடியும் லட்சுமணனும் பங்கேற்ற நிலையில் ஜனகராஜை பார்க்க முடியவில்லை.

இது குறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் திமுக-வினர், “அரசியலில் தனக்குப் போட்டியாக யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் லட்சுமணன் கவனமாக இருக்கிறார். முன்பு அதிமுக-வில் இருந்த போது, மாவட்டச் செயலாளர் பதவியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தான் சி.வி.சண்முகத்திடம் பறிகொடுத்தார். அதேபோல் இங்கேயும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு தான் முதலில் பொன்முடியை ஓரம்கட்டினார். இப்போது ஜனகராஜை ஓரம்கட்டுகிறார்” என்றார்கள்.

அரசியலில் தம்மை எப்படி வளர்த்துக் கொள்வது என்று யோசிப்பதை விட மற்றவர்களை வளரவிடாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்று பார்ப்பதுதான் அரசியல்வாதிகளுக்கு ஆகப்பெரும் பணியாக இருக்கும் போலிருக்கிறது.

அன்று பொன்முடி... இன்று ஜனகராஜ்! -  ‘லட்சியத்துடன்’ காய்நகர்த்தும் லட்சுமணன்
“அண்ணன் - தம்பியாக ஒன்றிணைந்து விட்டோம்” - இபிஎஸ் - டிடிவி தினகரன் உற்சாகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in