“முதல்வர் ஸ்டாலின் மிகப்பெரிய தோல்வி பயத்தில் இருக்கிறார்” - எல்.முருகன் கணிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகப்பெரிய தோல்வி பயத்தில் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி பஞ்சப்பூர் அருகே மார்ச் 11-ல் மத்திய அரசு சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளன. இந்நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேச இருக்கிறார்.

இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சியில் மார்ச் 11-ல் நடைபெறும் பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் கூட்டமாக இருக்கும்.

இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தொண்டர்கள் 7 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகப்பெரிய தோல்வி பயத்தில் உள்ளார்.

எப்போது தேர்தல் வந்தாலும் அவருக்கு தோல்வி என்பது நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேற்கு வங்கத்துக்குச் சென்ற குடியரசுத் தலைவரை இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில முதல்வரோ அல்லது அமைச்சர்களோ, அரசு தலைமைச் செயலாளர் போன்றவர்களோ வரவேற்கவில்லை.

இது மரபு மீறல். பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருந்து, உயர்ந்த பதவிக்கு வந்துள்ள குடியரசுத் தலைவரை இழிவுபடுத்தும் விதமாக மம்தா பானர்ஜி நடந்துகொண்டது கண்டனத்துக்குரியது. மேற்கு வங்கத்தில் எப்படி குடியரசுத் தலைவருக்கு களங்கம் ஏற்படுத்தி இருக்கிறார்களோ, அதேபோல, தமிழகத்திலும் ஆளுநரை தொடர்ந்து திமுக அவமதிப்பு செய்து வந்தது. தமிழக ஆளுநர் மாற்றம் என்பது பொதுவான ஒன்று. தவெக தலைவர் விஜய்க்கு இது முதல் தேர்தல். அவர் தேர்தலில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துவார், வாக்குகள் வாங்குவார் என்பது தெரியாது.

நடிகரை பார்க்க வருகிற கூட்டம் வேறு, அரசியல் நோக்கத்தோடு வருகிற கூட்டம் வேறு. எங்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. எங்கள் கூட்டணி திமுக-வை விட வேகமாக முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in