

முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மொழிப்போர் தியாகியுமான எல். கணேசன் (92), வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: மொழிப்போர்க் களத்தில், இந்திமொழியின் ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட மாணவர் படையின் தளகர்த்தர்களில் ஒருவரும் - கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான எல். கணேசன் மறைந்த செய்தியால் பெரிதும் துயருற்றேன்.
சட்டமன்றம் - சட்டமேலவை - நாடாளுமன்றம் என முழங்கிய அவரை இனி நாம் காண முடியாது என்பதை எண்ணும்போதே உள்ளம் வேதனையால் துடிக்கிறது. தலைவர் கருணாநிதியின் பாசத்தைப் பெற்ற 'எல்.ஜி.' அவர்கள், 1989-இல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவரது நாடாளுமன்றச் செயலாளராகவும் இருந்தார். நான் தஞ்சை மாவட்டத்திற்குச் செல்லும்போதெல்லாம் தவறாது அவரது இல்லத்திற்குச் செல்வேன்; அவரும் புன்சிரிப்புடன் வரவேற்று, நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் பெற்றுள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி பொங்கப் பெருமையோடு சொல்வார்.
திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்று அரசியல் களத்தில் பணியாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார். அவரது பிரிவால் வாடும் கழக உடன்பிறப்புகள், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ: மொழிப்போர் தளபதி என்றும், எல்.ஜி என்றும் நம்மால் அன்புடன் அழைக்கப்பட்ட தி.மு.கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் அண்ணன் எல்.கணேசன் இன்று காலை 5.30 மணி அளவில் இயற்கை அடைந்தார் என்ற செய்தியை சமத்துவ நடைபயணத்தின் போது கேட்டு பெரிதும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகில் உள்ள கண்ணந்தங்குடி கீழையூரில் பிறந்த அண்ணன் எல்.ஜி, இளமைப் பருவத்திலேயே அண்ணாவின் தலைமையேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றினார்.1965 ஆம் ஆண்டில் ஆதிக்க இந்தியை எதிர்த்து தமிழ்நாட்டின் மாணவர் பட்டாளம் நடத்திய இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி வெற்றிபெற அண்ணன் எல்.ஜி முனைப்போடு பணியாற்றினார்.
மாணவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளராக அவர் பணியாற்றியபோது, அவருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை அணிதிரட்டி போராடிய நினைவுகள் இப்போதும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது. 2004 ஆம் ஆண்டு திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மறுமலர்ச்சி திமுகழகத்தின் சார்பில் போட்டியிட்டு லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரது மறைவு திராவிட இயக்கத்திற்கு பேரிழப்பு ஆகும். தன்னிகரற்ற அவரது பொதுப்பணிக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, அவரது மறைவால் துயரம் அடைந்துள்ள அவரது துணைவியார் சகோதரி கமலா உள்ளிட்ட குடும்பத்தினர்களுக்கும், தோழர்களுக்கும் என் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
டிடிவி தினகரன்: தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும், மொழிப்போர் தியாகியுமான எல் கணேசன் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
எல்.கணேசனை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.