

கே.வி.தங்கபாலு | கோப்புப் படம்
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் இருக்கும் என்று விவாதங்கள் றெக்கை கட்டுகின்றன. இந்தச் சூழலில், தமிழக காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தலைவர் கே.வி.தங்கபாலுவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
பிஹார் தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
தேர்தல் அறிவிப்புக்கு முன்னும் பின்னுமாக 1.40 கோடி மகளிருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் நிதியளித்தது தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கும், தேர்தல் ஆணைய விதிகளுக்கும் எதிரானது. இந்த விவகாரத்தில் அரசே நேரடியாக ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு உலக வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன் தொகையில் ரூ.14 ஆயிரம் கோடி, இத்திட்டத்துக்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆக, பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெறவில்லை; வாக்குகளை விலைக்கு வாங்கி இருக்கிறது.
காங்கிரஸூக்கு அதிகமான இடங்களைக் கொடுத்ததும் தோல்விக்குக் காரணம் என்கிறார்களே..?
இது தவறான விமர்சனம். கடந்த தேர்தலில் காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டது. இம்முறை கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் மேலும் பல கட்சி
களுக்கு கூட்டணியில் இடமளித்ததால் 9 தொகுதிகளை விட்டுக் கொடுத்தது காங்கிரஸ். ஆனால், எங்களுக்கு ஆதரவான வாக்குகளை எஸ்ஐஆர் என்ற பெயரில் நீக்கிவிட்டு குறுக்கு வழியில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
பிஹார் முடிவுகளை வைத்து இங்கேயும் காங்கிரஸுக்கு தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் வருமா?
தமிழகத்தில் திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி வலுவாகவும், வளமாகவும் உள்ளது. இக்கூட்டணியில் இருக்கும் அனைவரும் கூட்டணிக்கு பலம் சேர்ப்பவர்கள்; கூட்டணி வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுபவர்கள். பல்வேறு வெற்றிகளை தொடர்ந்து பெற்ற கூட்டணி இது. எனவே, பிஹார் முடிவுகள் எந்த வகையிலும் காங்கிரஸையோ, திமுக கூட்டணியையோ பாதிக்காது.
தமிழக காங்கிரஸார், ‘அதிக இடங்கள்... ஆட்சியில் பங்கு’ எனச் சொல்வதை இம்முறை டெல்லி தலைமை காதுகொடுத்துக் கேட்குமா?
முந்தைய தேர்தலை விட கூடுதலான இடங்களைக் கேட்பது என்பது தேர்தலுக்குத் தேர்தல் எதிரொலிக்கும். ஆனால் காங்கிரஸைப் பொறுத்தவரை, கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எங்களின் கருத்துகளை கேட்டாலும் இறுதி முடிவு எடுப்பது என்னவோ அகில இந்திய தலைமை தான். அதேசமயம் அந்த முடிவானது மாநில காங்கிரஸூக்கு ஏற்ற முடிவாகவும் இருக்கும்.
ஒருவேளை, இம்முறை கூட்டணியை வலுப்படுத்துவதற்காக காங்கிரஸுக்கான கோட்டாவை திமுக குறைத்தால்..?
நாங்கள் இப்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புரிதலுடன் கூடிய கூட்டணியில் இருக்கிறோம். அதனால் அப்படி ஒரு சூழல் நிச்சயம் வராது.
தமிழ்நாடு காங்கிரஸில் பெண்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் வருத்தப்படுகிறாரே..?
இதற்கு முன்பு தமிழக காங்கிரஸில் மகளிருக்கு ஒரு எம்பி மட்டுமே இருந்தார். இப்போது 2 பேர் இருக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளிலும், சட்டப் பேரவையிலும் மகளிர் காங்கிரஸார் அங்கம் வகிக்கிறார்கள். கட்சிக்காக உழைக்கும் மகளிருக்கு உரிய மரியாதையையும், பொறுப்புகளையும் காங்கிரஸ் தலைமை வழங்கி வருகிறது; தொடர்ந்து வழங்கும்.
நீங்கள் மாநில தலைவராக இருந்த காலத்தில் இருந்தது போல் இப்போதும் கட்சியில் கோஷ்டிகள் இருக்கிறதா?
எல்லா காலத்திலும் கோஷ்டி அரசியல் இருக்கும். நாங்கள் நல்ல ஆரோக்கியமான அரசியலைச் செய்கிறோம். அதனால் தான் எதிர் கருத்துகளை வரவேற்கிறோம். கட்சியின் வளர்ச்சிக்காக சொல்லப்படும் அனைத்து கருத்துகளையும் ஏற்று செயல்படுகிறது காங்கிரஸ். ஆகவே, இதை கோஷ்டி அரசியலாக பார்க்கக்கூடாது.
தவெக-வுக்கு கூட்டணி தூது அனுப்பியதாமே காங்கிரஸ்..?
காங்கிரஸ் வெளிப்படையான கட்சி. அது மறைமுகமாக எதுவும் செய்யாது. தமிழகத்தில் இப்போது உள்ள கூட்டணியே சிறப்பாக செயல்படுகிறது. கூட்டணி விஷயத்தில் அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது.
நான்கரை ஆண்டு திமுக ஆட்சியின் நிறை, குறைகளைச் சொல்ல முடியுமா?
நிறைகள் நிறைய இருக்கின்றன. பொருளாதார ரீதியில் அகில இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான துறைகள் அகில இந்திய அளவில் முதன்மை பெற்றுள்ளதாக மத்திய அரசு சான்றளித்துள்ளது. குறை குறைவாகவே இருக்கிறது. இன்னும் ஆட்சிக்கு காலம் இருப்பதால் எஞ்சிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதியளித்திருக்கிறார்.
அரசுப் பணியிடங்களை நிரப்பாதது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு இதெல்லாம் இம்முறை உங்களுக்கு சவாலாக இருக்காதா?
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் அவகாசம் இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்கள் பலவற்றை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அவை எல்லாம் இந்தத் தேர்தலிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தரும்.