

குஷ்பு | கோப்புப் படம்
“இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது. இது முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக-வில் உள்ள அனைவருக்கும் நன்றாக தெரியும்” என பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு எந்தவொரு சட்டம் கொண்டு வந்தாலும் திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அவர்களால் செய்ய முடியாததை மத்திய அரசு செய்து கொண்டுள்ளது. தொகுதி மறுவரையறை சட்டத்தால் திமுக-வுக்கு மட்டும்தான் பாதிப்பு உள்ளதா? இந்தியா முழுவதும் வேறு எங்கும் போராட்டம் நடந்துள்ளதா?
திமுக-வுக்கு மட்டும் என்ன பிரச்சினை? மற்ற மாநிலங்கள் போராட்டமோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. திமுக-வினர் அரசியல் செய்கின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது. அடுத்த தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்ற தோல்வி பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது. இது முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக-வில் உள்ள அனைவருக்கும் நன்றாக தெரியும். அதனால்தான் இதுபோன்று செயல்படுகின்றனர்.
இன்று காலை முதல்வர் ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் லைட்டர் மூலம் சட்ட நகலை எரித்துள்ளார். இது கூட முதல்வருக்கு தெரியவில்லையா? முதல் பக்கச் செய்திக்காக, நானும் போராடுகிறேன் என மக்களை ஏமாற்றுவதற்காகவா போராடுகிறீர்கள்? திமுக-வில் உள்ள மூத்த தலைவர்கள் தகாத வார்த்தைகளால் பேசுவது வழக்கமாகி விட்டது. அவர்கள் மக்களுக்கு என்ன நல்லது செய்துள்ளார்கள். என்ன செய்யவில்லை என்பதை வைத்து மட்டுமே விமர்சிக்கிறோம்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசினார். அவர் மிரட்டுகிறாரா, எச்சரிக்கை விடுக்கிறாரா? இப்போது வரை தமிழ்நாட்டு மக்களை மட்டும்தான் மிரட்டிக் கொண்டிருந்தார். தற்போது பிரதமரை பார்த்து மிரட்டுகிறார். வேறு மாநிலத்தவர்கள் தமிழக முதல்வரை பார்த்து மிரட்டினால் திமுக-வினர் என்ன செய்திருப்பார்கள்? ஆனால், பாஜக-வினர் எதுவும் பதிலுக்குச் செய்யவில்லை.
எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது மரியாதை. ஆனால், சுயமரியாதையை மறந்து, தகாத வார்த்தைகளை முதல்வர் மட்டுமல்ல திமுக-வினர் அனைவரும் பேசும்போது, கருணாநிதி காலத்து திமுக எங்கே இருக்கிறது? அவருடன் சேர்த்து இவர்கள் புதைத்து வைத்துள்ளனர். அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.