

சென்னை: தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2003-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படத்துக்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டபோது எதிர்ப்பு எழுந்தது.
அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின்படி படத்தின் பெயர் ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டது.
தற்போது மீண்டும் அதே பெயரில் திரைப்படம் தயாரிக்கப்படுவது சாதிய மோதல்களையும் வன்முறையையும் தூண்டும் வகையில் அமைந்துவிடும்.
இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள ‘பழிக்குப் பழி ரத்தத்தின் மூலமே தீர்க்கப்படும்’ என்ற வாசகமும் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏற்கெனவே ‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் வந்துள்ளது. ஆனால், கமல் போன்ற பிரபலம் பெயர் வைப்பது அனைவரையும் சென்று சேரும் என்பதால் தடை செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.