

முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி என்பதால் விஐபி தொகுதியாக விளங்குகிறது கொளத்தூர். இந்த தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 35 பேர் களத்தில் உள்ளனர்.
திமுக - முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்த தொகுதியில் இதுவரை நடைபெற்ற 3 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் திமுக வேட்பாளராக மு.க.ஸ்டாலினே களமிறங்கி வெற்றி வாகை சூடியிருக்கிறார். தற்போது 4-வது முறையாகப் போட்டியிடுகிறார். தமிழகம் முழுவதும் முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து, திமுக அரசின் நலத்திட்டங்கள், தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதனைகள், திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றைக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதிமுக - சந்தான கிருஷ்ணன்: அதிமுக வேட்பாளரான சந்தான கிருஷ்ணன், தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாகவும் கூறி வாக்கு சேகரித்தார். மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு தற்போது நிறுத்திவைக்கப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும் வழங்கப்படும் எனவும் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி - சவுந்திர பாண்டியன்: நாம் தமிழர் கட்சி வேட்பாளரான சவுந்திர பாண்டியன், சீமான் பேச்சுகள் அடங்கிய தொகுப்பை ஸ்பீக்கரில் ஒலிபரப்பியபடி தொகுதி முழுவதும் வலம் வருகிறார். மது ஒழிப்பு, போதைப் பொருட்கள் தடுப்பு, மக்களுக்கு கல்வி, மருத்துவம், குடிநீர் இலவசம் போன்ற வாக்குறுதிகளை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் - வி.எஸ்.பாபு: தவெக வேட்பாளரான வி.எஸ்.பாபு, தொகுதியில் நிறைவேற்றப்படாத அடிப்படை வசதிகளை முன்வைத்தும், சாலைகளில் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். மேலும், விஜய் போல் உருவ ஒற்றுமை கொண்ட நபருடன் அவர் பிரச்சாரம் மேற்கொள்வது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் நெருங்குவதால் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இதனால் விஐபி தொகுதியான கொளத்தூரில் வெற்றி யாருக்கு என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.