“தேர்தலுக்கு 3 நாட்கள் முன்பு என்ன நடக்கும் என்று தெரியாது” - ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேர்காணல்

“தேர்தலுக்கு 3 நாட்கள் முன்பு என்ன நடக்கும் என்று தெரியாது” - ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேர்காணல்

Published on

அண்ணா காலத்திலிருந்து தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக். வெற்றியோ, தோல்வியோ எந்த நிலையிலும் திமுக-வுடன் தோழமை உறவை பேணி வரும் அக்கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.

Q

உங்கள் அனுபவத்தில் இதற்கு முன்பு பல எஸ்ஐஆர்கள் நடந்திருக்கலாம். தற்போது இந்த எஸ்ஐஆர் தேவை என்று நினைக்கிறீர்களா?

A

ஆண்டுக்கு இரண்டு முறை வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் திருத்தம் செய்வது வழக்கம் தான். ஆனால் இப்போது, எஸ்ஐஆர் என புதிதாக ஒரு வார்த்தையை கொண்டுவந்துள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தம் அதாவது ரிவிஷன் என்பது அனைவருக்கும் தெரியும். ‘ஸ்பெஷல் இன்டன்சிவ்’ என்று புதிய வார்த்தையை சேர்த்திருக்கிறார்கள். அதற்கான விளக்கத்தை இதுவரை சொல்லவில்லை. முன்னரே சொல்லியிருந்தால் எஸ்ஐஆர் தொடர்பாக எந்த பிரச்சினையும் வந்திருக்காது. தெளிவாக சொல்லாத காரணத்தினால்தான் அதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது.

Q

எஸ்ஐஆரை அதிமுக ஆதரிக்கிறது... திமுக கூட்டணி பதறுகிறது. உண்மையில் நடப்பது தான் என்ன?

A

பிஹாரில் எஸ்ஐஆர் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் குறிப்பாக, பெரும்பாலான முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக செய்திகள் வந்ததால் எஸ்ஐஆர் பெரிய பிரச்சினை ஆனது. தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் பேர் வெளிநாடுகளில் உள்ளனர். ஆயிரக் கணக்கானோர் இடம் மாறியிருக்கிறார்கள்.

அவர்களின் பெயர்கள் எல்லாம் புதிய வாக்காளர் பட்டியலில் இருக்குமா இ்ல்லை நீக்கப்படுமா என்ற சந்தேகம் எழு்ந்திருப்பதால் எஸ்ஐஆர் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பிஹாரில் அதிக எண்ணிக்கையிலான வா்க்காளர்கள் நீக்கப்பட்டதால் தமிழகத்திலும், கேரளத்திலும் எஸ்ஐஆர் மீது ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

Q

எஸ்ஐஆர் என்பது சிஏஏ-வின் மறுவடிவம் என்கிறாரே திருமாவளவன்..?

A

ஒரு ஊகத்தின் பேரில் அவர் இவ்வாறு சொல்லி இருக்கலாம். ஆனால், உரிய காரணம் இல்லாமல் எந்த வாக்காளர் பெயரும் நீக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருப்பதால் ஊகத்தின் அடிப்படையில் வேறுவிதமாக நினைக்க வேண்டியதில்லை.

Q

2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக தனித்து போட்டியிட்டால் சாதக பாதகம் யாருக்கு?

A

சகோதரர் விஜய்க்கு இருக்கும் சினிமா பிரபலம் காரணமாக ரசிகர்கள் ஏராளமாக இருப்பதை அவருக்கு கூடும் கூட்டத்தால் அறிய முடிகிறது. அவர்கள் அனைவரும் ரசிகர்களாக பார்க்கிறார்கள். அவர்களை வாக்காளர்களாக பார்க்கும் வாய்ப்பு இன்னும் வரவில்லை. அவர்கள் எப்படி மாறுவார்கள் என்று சொல்ல முடியாது. “தேர்தல் நடப்பதற்கு 3 நாளைக்கு முன்புதான் மக்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்” என்று எம்ஜிஆர் ஒருமுறை என்னிடம் சொன்னார். எனவே, தேர்தலில் கடைசி 3 நாளில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

Q

விஜய்யுடன் கூட்டணி வைக்க காங்கிரஸுக்குள்ளும் சிலருக்கு விருப்பம் இருக்கிறது. அப்படி நடந்தால் திமுக அணிக்கு பாதிப்பு ஏற்படுமா?

A

காங்கிரஸ் கட்சி திமுக கூடடணியை விட்டு வெளியேறி வேறு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பது அத்தைக்கு மீசை முளைத்த கதைதான். திமுக கூட்டணியில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.

Q

வரும் தேர்தலில் திமுக-விடம் எத்தனை இடங்களை கேட்கலாம் என தீர்மானித்திருக்கிறீர்கள்?

A

கடந்த முறை திமுக கூட்டணியில் எங்களுக்கு 3 இடங்கள் ஒதுக்கினர். ஆனால், எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதனால், முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க முடியாமல் போனதே என்ற வருத்தம் அனைவருக்கும் உண்டு. வரும் சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தது 5 இடங்கள் கேட்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.

Q

ஒருவேளை, நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட சில தொகுதிகள் கிடைக்காமல் போனால்..?

A

எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 18 தொகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவற்றில் இருந்துதான் 5 தொகுதிகளைக் கேட்போம். அண்ணா காலம் தொட்டு கருணாநிதி, ஸ்டாலின் காலம் வரையிலும் திமுக-வின் பாரம்பரியம் வழக்கம் என்பது முஸ்லிம் லீக் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கி நாங்கள் கையெழுத்திட்ட பிறகே மற்றவர்கள் கையெழுத்திடுவார்கள். அதனால், நாங்கள் கேட்கும் தொகுதிகளை நிச்சயம் கொடுப்பார்கள். அவர்கள் கொடுக்க முடியாத தொகுதிகளை நாங்கள் கேட்கவே மாட்டோம்.

Q

திமுக அரசு சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கு முழுமையாக செவிசாய்க்கிறதா?

A

நிச்சயமாக. சிறுபான்மையினராகிய முஸ்லிம்களின் கோரிக்கைகளில் பெரும்பாலான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது. முஸ்லிம்கள் நினைப்பதையும் அவர்கள் நினைக்காததையும் செய்யக்கூடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Q

பிஹார் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்கிறார்களே பாஜக தலைவர்கள்..?

A

ஆமாம். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணி அமோக வெற்றி என்று தான் இருக்கும். பிஹாரைப் போல திமுக கூட்டணியும் 202 இடங்களில் வெற்றிபெறும். பிஹார் முடிவு வெற்றி திமுக கூட்டணிக்குத்தான் கிடைக்கும். இது நிச்சயமாக நடக்கும். உள்ளுணர்வுடன் சொல்கிறேன்.

Q

கட்சிகளுக்கு வாக்களிப்பதில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் மாறுபட்டு சிந்திப்பதாக நினைக்கிறீர்களா?

A

தமிழக மக்கள் திராவிட பாரம்பரியத்தில் ஊறிப்போனவர்கள். அண்ணா, கருணாநிதி ஆட்சி மட்டுமல்ல எம்ஜிஆரின் ஆட்சியும் திராவிட பாரம்பரிய ஆட்சிதான். ஏன், ஜெயலலிதாவின் ஆட்சியும் திராவிட பாரம்பரிய ஆட்சிதான். தமிழகத்தில் பாஜக கால் பதிக்கிறது என்று சொல்கிறார்கள். அதெல்லாம் இங்கு எடுபடாது. தாமரை மலரும் என்று பாஜக-வினர் ஆசைப்படலாம். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. காரணம், தமிழக மக்கள் கோயிலுக்கு செல்லக் கூடியவர்கள்தான். ஆனால் அவர்கள், பாஜக பிரச்சாரம் செய்யும் இந்துத்துவ கொள்கையில் இல்லை.

“தேர்தலுக்கு 3 நாட்கள் முன்பு என்ன நடக்கும் என்று தெரியாது” - ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேர்காணல்
”தனலாபம் ஈட்டுவதற்காக அரசியலுக்கு வந்தவர் விஜய்!” - கட்சியை கலைக்கும் தமிழருவி மணியன் தாக்கு | நேர்காணல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in