

சென்னை: நடப்பாண்டில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவோ அல்லது பிறகோ கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் திறக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம், ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் இன்று கூறியது: “ஆதம்பாக்கம் ரயில் நிலைய தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறு உள்ளது. தண்டவாளம் வளைந்து உள்ளதால், ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்குவதில் சிரமம் இருக்கிறது. எனவே, இதை சரி செய்யும் பணிகளில் ஈடுபட உள்ளோம். இப்பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டு, பணி நடைபெற உள்ளது. விரைவில், இந்த ஒரு ரயில் நிலைய பாதுகாப்பு பணிகளுக்கான சான்றிதழ் பெற்று ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
கிளம்பாக்கம் ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையில், ஜிஎஸ்டி சாலையில் ஆகாய நடைபாதை பணிகள் மாநில அரசு தரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, ரயில் நிலையத்தோடு இணைக்க வேண்டிய பணிகள் மீதம் இருக்கின்றன. பணிகளை முடித்து, நடப்பாண்டில் தீபாவளிக்கு முன்பாகவோ அல்லது தீபாவளிக்கு பிறகோ கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் திறக்க வாய்ப்புள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்துக்கு 2-வது ஏசி மின்சார ரயில் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்ட வர திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம் - கடற்கரை தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சேத்துப்பட்டு நிலையத்தில் நெடுநேரம் நிறுத்தி இயக்கப்படுவதால், பயணிகள் சிரமத்தை சந்திப்பதாக புகார்கள் வருகின்றன. லோக்கல் பாஸ்ட் ரயில்களை விரைவு பாதையில் இருந்து மின்சார ரயில் பாதைக்கு மாற்றி இயக்குவதால், இந்த தாமதம் ஏற்படுகிறது. விரைவில், இப்பிரச்சினை சரிசெய்யப்படும்” என்று அவர் கூறினார்.
ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் செந்தில்குமார் கூறும்போது, “சென்னை கோட்டம் கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.5 ஆயிரத்து 38 கோடி வருவாய் எட்டியுள்ளது. 11.330 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. 26 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முழுவதுமாக பொருத்தப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.720 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச்சில் முடிக்கப்படும்.
ஆவடி - கும்மிடிப்பூண்டி 3-வது மற்றும் 4-வது பாதை, அரக்கோணம் - செங்கல்பட்டு 2-வது பாதை, தாம்பரம் - செங்கல்பட்டு, 4-வது பாதை, வில்லிவாக்கம் - அம்பத்தூர் 5-வது மற்றும் 6-வது பாதைகள் இந்த நான்கு திட்டங்களும் தற்போது வெவ்வேறு ஒப்புதல் மற்றும் டெண்டர் கட்டங்களில் உள்ளன. சில திட்டங்களில் டெண்டர் கோருதல், டெண்டர் இறுதி செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார். பேட்டியின்போது, ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரிகள் ஏழுமலை, வினோத் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.