அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 6 பேருக்கு முக்கியப் பொறுப்பு: தவெக வட்டாரம் தகவல்

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 6 பேருக்கு முக்கியப் பொறுப்பு: தவெக வட்டாரம் தகவல்
Updated on
1 min read

சென்னை: அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த 6 பேருக்கும் மாநில அளவிலான பதவிகளை வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தவெகவில் இணையவிருக்கும் நிகழ்ச்சியில் போது, 6 பேருக்கு இன்று தவெகவில் பொறுப்புகள் வழங்கபடவிருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

அதிமுக எம்எல்ஏவாக தேர்வான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவர்களும் தவெகவில் இணைந்தனர். இதுதவிர முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்துள்ளனர்.

அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் முக்கியப் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இணைந்த நிலையில், அவர்கள் யாரும் தவெக தலைவரும், முதல்வருமான விஜய்யை நேரில் சந்திக்கவே முடியாமல் திணறிவருகின்றனர். மேலும் கட்சியில் இணைந்தும் இதுநாள் வரை தங்களுக்கு கட்சிப்பதவி வழங்கப்படவில்லை என்ற கவலையோடு, வெளியே சொல்லமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதனிடையே புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் மீண்டும் விராலிமலையில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சராகவிடலாம் என்ற கனவோடு சி.விஜயபாஸ்கரும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கரும் திட்டமிட்டு காய் நகர்த்தி வந்தனர்.

இதையறிந்த தவெகவின் தொடக்க கால நிர்வாகிகள், இதைக் கட்சியின் தலைமைக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது முதல்வர் விஜய் தலையிட்டு, ” நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம். உங்களுக்கான பதவியில் எந்த இடையூறும் இருக்காது, நான் பார்த்துக் கொள்கிறேன்,” என தெளிவுபடக் கூறியுள்ளார் என தவெகவின் தலைமை நிர்வாகிகள் கட்சியினரை தேற்றிவருகின்றனராம்.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த 6 பேருக்கும் மாநில அளவிலான பதவிகளை வழங்கத் திட்டுமிட்டுள்ளாராம் விஜய். அதன்படி இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தவெகவில் இணையவிருக்கும் நிகழ்ச்சியில் போது, 6 பேருக்கு இன்று தவெகவில் பொறுப்புகள் வழங்கபடவிருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

அதற்கு அடுத்து, முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்படுமாம். அதுவரை அடுத்த சனிக்கிழமையில் இவர்கள் பொறுத்திருக்க வேண்டுமாம். ஆனால் அடுத்த சனிக்கிழமை என்பது இந்த மாதத்திலா எனக் கேள்விகளோடு பொறுப்புகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் மாஜி அதிமுகவினர்

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 6 பேருக்கு முக்கியப் பொறுப்பு: தவெக வட்டாரம் தகவல்
CWG 2026: மூட்டுவலியை வென்று பதக்கம் வென்ற சீமா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in