

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார்.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் (80). வழக்கமாக ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை உட்பட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று காலை சென்னை அப்போலோ மருத்து வமனையில்பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் குழுவினர், ‘ரத்த பரிசோதனை கள், இசிஜி’ உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். ஒரு சில சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பரிசோதனைகள் முடிந்த நிலையில், மாலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தமிழ் மகன் உசேனுக்கு சிகிச்சை: இதேபோல் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பித்தப்பை கல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவர், சமீபத்தில் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்த அவரை உடனடியாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்ததில், பித்தப்பை கல், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் சிவ பிரசாத் ராவ் போபா நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்” என கூறியுள்ளார்.