

சென்னை: அமைச்சர் மரிய வில்சன் உடனான பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காசிமேடு மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஆந்திராவில் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ஆந்திர மாநிலத்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 8 விசைப்படகுகளை மீட்டுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காசிமேடு மீனவர்கள் கடந்த 19-ம் தேதி முதல் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால், விடுமுறை நாளான நேற்றைய தினம் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் மீன் வரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் சங்க நிர்வாகிகளை, நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று காசிமேட்டில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பின்னர் நிதியமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் அறிவுறுத்தலின்படி மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவ.24-ம் தேதி (நாளை) காசிமேடு வருகை தரும் துறையின் அமைச்சர் மூலமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கூடுதலாக ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நிவாரணத் தொகை வழங்கப்படும்.
மீதமுள்ள தொகையை வழங்குவது குறித்து விரைவில் பரிசீலித்து அறிவிக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆந்திரக் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற போது கடந்த 6 மாதங்களாகச் சிறை பிடிக்கப்பட்டுள்ள 8 விசைப் படகுகளை மீட்பது தொடர்பாக, அங்கு தேர்தல் நடைமுறைகள் முடிந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
படகு உரிமையாளர்கள் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மீனவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக முதல்வர் தலைமையில் அண்மையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆந்திர மாநிலத்தில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கடலில் அவசரக் காலங்களில் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்துவது, கடலோரக் கண்காணிப்பை அதிகரிப்பது, முகத்துவாரப் பகுதியில் சங்கிலித் தடுப்பு அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய மீன்பிடித் தடை காலத்தை நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மரிய வில்சன் கூறினார்.
அரசின் இந்தச் சாதகமான அறிவிப்புகளைத் தொடர்ந்து, தங்களது போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுவதாகக் காசிமேடு மீனவர் சங்கத்தினர் அறிவித்தனர்.