

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான விசாரணைக்காக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு 2வது நாளாக புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், வழக்கறிஞர் அரசு உள்ளிட்டவர்கள் ஆஜராகினர்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியும், போன் மூலம் அழைத்தும், நேரில் சென்றும் அக்.30ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், குடியிருப்பவர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார், தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பவர் கிரிட் அலுவலர்கள், தமிழ்நாடு மின் வாரியம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
இதற்கிடையில் நவ.8 மற்றும் 9ம் தேதி ஆகிய இரு நாட்கள் தவெக வழக்கறிஞர் அரசு உள்ளிட்டோர் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காமரா பதிவுகள் அடங்கிய வீடியோக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் உட்பட சிபிஐயை கேட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து 2 நாட்களாக விளக்கம் அளித்தனர்.
நவ.16ம் தேதி நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷியிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த 19ம் தேதிக்கு பிறகு 4 நாட்களாக விசாரணைக்கு யாரும் ஆஜராகாத நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பவுன்ராஜ், வழக்கறிஞர் அரசு ஆகியோர் நேற்று ஆஜராகினர்.
காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 10 மணி நேரம் அனைவரிடமும் விசாரணை நடைபெற்றது. கரூரில் தனியார் ஹோட்டலில் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் நேற்று தங்கினர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்காக 5 கார்களில் (நவ.25ம் தேதி) புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல்குமார், வி.பி.மதியழகன், வழக்கறிஞர் அரசு ஆகியோர் ஆஜராகினர்.
முதல் நாள் வந்த பவுன்ராஜ் 2வது நாள் வரவில்லை என கூறப்படுகிறது. விசாரணை காரணமாக கரூர் வெங்கக்கல்பட்டி சாலையில் இருந்து எஸ்.பி. அலுவலகம் செல்லும் நுழைவு சாலையின் கேட் மூடப்பட்டு விசாரணைக்கு வந்தவர்கள் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.