

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அரசுப் பணி, தற்காலிகப் பணியாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு விவரம்: கரூரில் தவெக சார்பில் கடந்தாண்டு நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தக்குடும்பங்களைச் சேர்ந்தோ ருக்கு அரசு வேலை வழங்கப்படுகிறது. ஏற்கெனவே உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பிலும், தவெக சார்பிலும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிக் கூட்டங்களில் நெரிசலில் சிக்கி உயிரிழப்போருக்கு அரசு வேலை வழங்குவது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும். அரசுப் பணியாளர் தேர்வாணையம், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அல்லது பிற சட்டப்பூர்வ பணியாளர் தேர்வு முறையைப் பின்பற்றியே அரசுப் பணி வழங்கப்பட வேண்டும். இந்த முறைகளைப் பின்பற்றாமல் அரசுப் பணி வழங்குவது சட்டவிரோதம்.
மேலும் இந்தச் செயல்பாடு தமிழகத்தில் அரசுப் பணிக்காக கடுமையாகப் படித்து வரும் லட்சணக்கணக்கான இளைஞர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையைப் பாதிக்கும்.
எனவே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நேரடியாக அரசு வேலை வழங்கத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், “உயிரிழந்தோரின் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதில் என்ன தவறு? அவர்களுக்குப் பொருளாதார உதவி தேவை தானே?” என்றனர்.
அரசுத் தரப்பில், “வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. அரசு கொள்கை முடிவெடுத்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்துள்ளது. பணி நியமன ஆணை வழங்கும் நாளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என கூறப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “அரசின் கொள்கை முடிவு என்றால் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ஏற்கெனவே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த மனுவை திரும்பப் பெறவும், மனுதாரர் தரப்பு பிற சட்டப்பூர்வ தீர்வுகளை நாடவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மனுதாரர்கள் தரப்பில், கரூர் நெரிசல் சம்பவத்தில் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது விதிகளை மீறும் செயல் என வாதிடப்பட்டது. பணியில் இருக்கும்போதே உயிரிழக்கும் அரசு ஊழியரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பாக விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தை அரசின் தீவிர நடவடிக்கையின் விளைவாகக் கருதலாம் என சிறிய வேறுபாட்டைச் சுட்டிக்காட்டலாம். எப்படியிருந்தாலும் அரசின் கொள்கை முடிவில் இந்த நீதிமன்றம் தலையிடுவது மிகவும் குறுகிய கண்ணோட்டமாக அமையும்.
எனவே, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு என்பது நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்பட்ட தற்காலிக அடிப்படையில் மட்டுமே இருக்கும் என்ற நிபந்தனையுடன் பணி நியமன ஆணை வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட நபர்கள் தங்கள் முதல் சம்பளத்தைப் பெறுவதற்கு முன்பாகவே இம்மாத இறுதிக்குள் முக்கிய விவகாரங்கள் குறித்து விசாரிக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பணி நியமன நடவடிக்கையைத் தொடலராம்.
இந்த வழக்கு 21.07.2026 பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும். அப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலர், கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கரூரில் வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பில் அந்த வழிகாட்டுதல்கள் பொருந்துமா? என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராகச் சேர்க்கிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.