

கரூர்: கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு முதல்வர் விஜய் நேற்று கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், ஒருவருக்கு கருணைத் தொகையாக ரூ.10 லட்சம் அளித்தார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்தாண்டு செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. அவர்களை சென்னை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதல் கூறினார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்நிலையில், கரூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் சி.முத்துக்குமரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆணைகளையும், ஒருவருக்கு ரூ.10 லட்சத்துக்கான கருணைத் தொகையையும் முதல்வர் விஜய் வழங்கினார். அப்போது, பணி ஆணையை பெற்ற பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர் கண் கலங்கினர். அப்போது, முதல்வரும் கண் கலங்கி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கிருந்தபடி, மணவாசியில் தனியார் காலணி தொழிற்சாலைக்கான அடிக்கல்லை முதல்வர் விஜய் நாட்டினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், கீர்த்தனா, விஜயலட்சுமி மற்றும் ஜோதிமணி எம்.பி. கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம்.சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.