

கரூர்: மதுரை அவனியாபுரம் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 9 பேருக்கான தண்டனை அறிவிப்பு ஏப்.6-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மணலூர் புளியங்குளத்தைச் சேர்ந்த சிலர் 2012-ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றுவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, மதுரையை அடுத்த சிந்தாமணி அருகே ஒரு கும்பல்காரை மறித்து பெட்ரோல் குண்டு வீசியது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த ராமர் பாண்டி (36), சிந்தாமணியைச் சேர்ந்த மணிகண்டன் (37), கார்த்திக் (36), முத்துவிஜி (22) உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், ஜாமீனில் வந்த முத்துவிஜி கடந்த 2013-ல் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு நீதிமன்ற விசாரணைக்கு வந்துவிட்டு ஊர் திரும்பும் வழியில் அரவக்குறிச்சி அருகே ராமர் பாண்டி கொலை செய்யப்பட்டார்.
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என்று மார்ச் 23-ம் தேதி அறிவித்த மாவட்ட அமர்வு நீதிபதி கே.ஹெச். இளவழகன், அவர்களுக்கான தண்டனை விவரங்களை மார்ச் 25-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இவ்வழக்கில் சில வாதங்களை முன்வைக்க உள்ளதாக அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் நேற்று கோரியதை அடுத்து, மத்திய சிறையில் இருந்த 9 பேரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, இவ்வழக்கின் தண்டனை விவரங்களை ஏப்.6-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.