

கார்த்தி சிதம்பரம் எம்.பி
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதி சார்பில், சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி சென்னை சூளைமேட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தொடங்கி வைத்து பேசுகையில், “பொங்கல் பண்டிகை கலாச்சாரத்தின் அடையாளம். அதை எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவதே சமத்துவ பொங்கல்” என்றார்.
பின்னர் நிருபர்களிடம் கார்த்திக் சிதம்பரம் கூறியதாவது: கிரிகோரியன் காலாண்டர்படி ஜன.1 புதிய ஆண்டு. நான் பின்பற்றும் தமிழ் பஞ்சாங்கத்தின்படி, சித்திரை 1 புத்தாண்டு. தை ஒன்றாம் தேதி பொங்கல் திருநாள், தமிழர் திருநாள்.
‘பராசக்தி’ படத்தை நான் பார்ப்பதாக இல்லை. திரைப்படங்கள் வெற்றி அடையலாம் அல்லது தோல்வியும் அடையலாம். இதற்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஒரு திரைப்படத்தை வைத்து, யாராவது அரசியல் கதை அமைக்கலாம் என்றால், அதைவிட அபத்தம் எதுவும் இல்லை. ‘ஜனநாயகன்’ படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நான் அந்தப் படத்தையும் பார்க்கப் போவதில்லை.
தமிழகத்தில், ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்ற குரல் ஓங்கி ஒலிப்பது புதிய, தனித்துவம் வாய்ந்த, உலகத்தில் யாருக்குமே உதிக்காத சிந்தனை இல்லை. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தங்கள் பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றிபெற்று, அரசில் இடம்பெறவே கட்சி ஆரம்பிக்கிறார்கள். இந்த சராசரியான எதிர்பார்ப்பே காங்கிரஸ் கட்சிக்கும் உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அதிகாப்பூர்வமாக திமுகவுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதற்காகவே 5 பேர் கொண்ட குழு உள்ளது. இதுவே அதிகாரபூர்வநிலை. மற்றபடி, காங்கிரஸ் கட்சிக்குள் பலருக்கு பலவித கருத்து இருக்கும்.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவரை சிபிஐ விசாரணைக்கு அழைத்தது என்பது வாடிக்கையான ஒன்றே.
பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார் என்றார்கள். அவர் நன்றாக வரட்டும். வந்தபிறகு, தமிழ் கலாச்சாரமே பிடிக்கும், வேட்டி கட்டினால் தான் தூக்கமே வருகிறது. இரவில் பாரதியார் கவிதை கேட்டுதான் தூங்குவேன். திருக்குறளை படிக்காத நாளே இல்லை என்று பிரதமர் கூறுவார். இதை 4 மாதங்களுக்கு கூறுவார். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, காங்கிரஸ் கட்சி 109-வது மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம், காங்கிரஸ் கட்சி ஆயிரம் விளக்கு பகுதி தலைவர் கராத்தே செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.