‘கன்னிப் பேச்சு’ இனி ‘அறிமுக உரை’ - அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி நன்றி

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

Updated on
2 min read

சென்னை: “எனது கோரிக்கையை ஏற்று, அதை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இனி சட்டப்பேரவையில் பேசும் எந்த உறுப்பினரும், ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுக உரை’ அல்லது ‘முதல் உரை’ என்றே குறிப்பிட வேண்டும்” என்று பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி. சட்டப்பேரவையில் இனி ‘கன்னிப் பேச்சு’ என்ற வார்த்தை இடம்பெறக் கூடாது. கடந்த 2021-ஆம் ஆண்டு கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று, முதல் முறையாக நான் எம்.எல்.ஏ. ஆனபோது, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட பலரும் அதை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிட்டனர்.

சட்டப்பேரவையில் முதல் முறையாக எனக்குப் பேச வாய்ப்பு கிடைத்தபோது, “வழக்கமாக சட்டப்பேரவையில் முதல் உரையை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுகிறீர்கள். ‘கன்னி’ என்ற வார்த்தை இளம் வயதுப் பெண்ணைக் குறிக்கும் வார்த்தை. என்னைப் பொறுத்தவரை, இந்த முதல் பேச்சை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுகப் பேச்சு’, ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிட்டால் நாகரிகமாக இருக்கும்” என்றேன்.

அதற்குப் பதிலளித்த அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். ஆனால், இப்போது புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் ‘கன்னிப் பேச்சு’ என்றே குறிப்பிடுகின்றனர்.

இதை மாற்றி, ‘அறிமுகப் பேச்சு’ அல்லது ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிடுமாறு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுறுத்த வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தேன். அது பரவலாகக் கவனம் பெற்றிருந்தது. பலரும் என்னைத் தொடர்புகொண்டு, “முக்கியமான ஒரு விஷயத்தை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று பாராட்டினர்.

அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் இன்று பாமக சட்டமன்றக் கட்சித் தலைவர் சவுமியா அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. லதா ஆகியோர் ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவதற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அதற்குப் பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “கடந்த சட்டப்பேரவையில் முன்னாள் உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘கன்னிப் பேச்சு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக ‘அறிமுக உரை’ என்று பயன்படுத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கியிருந்தார். அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் இதைப் பரிசீலிப்பதாகக் கூறியிருந்தார். சட்டப்பேரவைத் தலைவர் இதைப் பரிசீலித்து, ‘அறிமுக உரை’ என்று குறிப்பிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

எனது கோரிக்கையை ஏற்று, அதை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இனி சட்டப்பேரவையில் பேசும் எந்த உறுப்பினரும், ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுக உரை’ அல்லது ‘முதல் உரை’ என்றே குறிப்பிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>வானதி சீனிவாசன்</p></div>
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்; பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடல்: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in