ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலத்தில் கம்மா குளோபல் ஃபெடரேஷன் சார்பில் நடைபெற்ற மாநாட்டை அந்த அமைப்பின் தலைவர் ஜெட்டி குசுமா குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தேர்தலில் போட்டியிட கம்மா சமூகத்தினர் 30 பேருக்கு வாய்ப்பு தர வேண்டும்: கம்மா குளோபல் ஃபெடரேஷன் மாநாட்டில் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலத்தில் கம்மா குளோபல் ஃபெடரேஷன் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கம்மா சமூகத்தைச் சேர்ந்த 30 பேருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என அதன் தலைவர் ஜெட்டி குசுமா குமார் வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலத்தில், கம்மா குளோபல் ஃபெடரேஷன் சார்பில் மாநாடு நேற்று நடைபெற்றது. கம்மா குளோபல் ஃபெடரேஷனின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜெட்டி குசுமா குமார் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கம்மா குளோபல் ஃபெடரேஷன் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம், ஏற்பாடு செய்யப்பட்ட நேரடி சந்திப்பு நிகழ்ச்சிகளில், இந்த நிகழ்வு பெரிய நிகழ்ச்சியாக அமைந்தது. கம்மா சமூகங்களை ஒன்றிணைத்து, கலாச்சாரத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஃபெடரேஷன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த கூட்டமைப்பு உலகளவில் சுமார் 2.1 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது, இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 1.5 சதவீதமாகும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாநாட்டில், கடந்த ஓராண்டில் கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இதில், அனைவரையும் ஒருங்கிணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர், மாநாட்டில் ஜெட்டி குசுமா குமார் பேசியதாவது: நமது சமூகத்துக்குள் ஒரு கட்டமைக்கப்பட்ட உரையாடலை அனுமதிக்கும் ஒரு பொதுவான தளத்துக்கான வளர்ந்து வரும் தேவையே இந்நிகழ்ச்சி. கடந்த ஓராண்டில் கூட்டமைப்பின் விரிவாக்கம், முன்னுரிமைகள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க நேரடி சந்திப்புகள் அவசியமாகியுள்ளது. இப்போது, நமது கவனம் அமைப்பு உருவாக்கம், பிராந்தியப் பிரிவுகளின் தொடர்ச்சியான பங்கேற்பு மற்றும் கூட்டமைப்பு தொடர்ச்சி மற்றும் தெளிவுடன் செயல்பட அனுமதிக்கும் அமைப்புகளை உருவாக்குவதில் உள்ளது.
இந்த மாநாட்டிலிருந்து உருவாகும் நீண்ட கால நோக்கங்களில் ஒன்றான, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் குறைந்தது 30 கம்மா சமூகத்தினருக்கு வாய்ப்பளித்து தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்.பி.விஸ்வநாதன் மற்றும் கம்மா குளோபல் ஃபெடரேஷன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
