

சென்னை: காமராசர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் முதல்வர் விஜய்யால் சென்னையில் செப்.22-ம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் நோக்கத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022 செப்.15-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இதன்கீழ் கிச்சடி, பொங்கல் என தினமும் ஏதேனும் ஒரு உணவு வழங்கப்படுகிறது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 19.34 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் காலை உணவுத் திட்டத்தின் பெயர் காமராசர் பெயரில் மாற்றப்பட்டு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கான தொடக்க விழா பெரியார் பிறந்த நாளான செப்.17-ம் தேதி நடைபெறும். காமராசர் பிறந்த விருதுநகரில் உள்ள பள்ளியில் இத்திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக, காமராசர் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி செப்.22-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ‘சென்னையில் இத்திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார்.
இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் இத்திட்டம் 22-ம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துவிடும்’ என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூகநலத் துறை செயலர் பல்லவி பல்தேவ் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் இன்று திரும்புகிறார்: தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் கடந்த 10-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடிகர் அஜித்குமார் பங்கேற்ற லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதல்வரின் லண்டன் பயணத்தில் சர்வதேச முன்னணி நிறுவனங்களுடன் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், ஒருவார சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் விஜய், லண்டனில் இருந்து நேற்று இரவுபுறப்பட்டார். துபாய் வழியாக இன்று (செப்.17) காலை 8 மணிஅளவில் சென்னை வந்தடைகிறார். விமான நிலையத்தில் முதல்வருக்கு தவெக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.