“ஒரு தமிழனின் தலைமையின் கீழ் செயல்பட முடிவெடுத்தேன்” - அதிமுகவில் இணைந்த காளியம்மாள் கருத்து
அதிமுக-வில் இணைந்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், ஒரு தமிழனின் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அடுத்தபடியாக அக்கட்சியின் மேடைகளில் தனது ஆக்ரோஷமான பேச்சால் பெரும் கவனத்தை ஈர்த்தவர் காளியம்மாள். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியிலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியிலும் போட்டியிட்டு பரவலான அறிமுகத்தை பெற்றார். இறுதியாக, 2024 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறையில் களம் கண்டு, சுமார் 1.27 லட்சம் வாக்குகளை பெற்று தனது செல்வாக்கை நிரூபித்தார்.
இருப்பினும், கட்சித் தலைமைக்கும் காளியம்மாளுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2025 பிப்ரவரி மாதம் நாதக-விலிருந்து விலகுவதாக காளியம்மாள் அறிவித்தார். அதன் பின்னர் அவர் திமுக அல்லது தவெக-வில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஒருங்கிணைப்பில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் சென்னை இல்லத்தில், நேற்று அவரைச் சந்தித்த காளியம்மாள் தன்னை அதிமுக-வில் இணைத்துக் கொண்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் காளியம்மாள் கூறுகையில், “ஓர் அரசியல் கட்சியில் இருந்து விலகி ஓராண்டுக்குப் பிறகு தற்போது எளிய மக்களுக்கானஒரு அரசியல் வாய்ப்பை உருவாக்குவதற்காகவும், உரிமைக்கு குரல் எழுப்புவதற்காகவும் திரும்பவும் களத்துக்கு வந்துள்ளேன். அதற்காக அதிமுக-வில் இணைந்துள்ளேன். காரணம், அதிமுக-வுக்கு தலைமை ஏற்றுள்ள பழனிசாமி ஒரு சாமானிய குடும்பத்தில் இருந்து வந்தவர்.
இக்கட்சியில், சாமானியனும் தலைமையை எட்டமுடியும் என்ற ஜனநாயகச் சூழல் இருக்கிறது. மேலும், ஒரு தமிழனின் தலைமையின் கீழ் தான் இயங்க வேண்டும் என்ற மன உறுதியுடன் நான் இருந்து வந்ததால், அதிமுக-வை தேர்வு செய்துள்ளேன்.
இந்த தேர்தலில் இருந்து மீண்டும் என்னுடைய அரசியல் பயணம் தொடரும். இன்றைக்கு, சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மாற்றாக வரும் தேர்தல் முடிவுகள் அமையும். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.
