

சென்னை ராயபுரத்தில் நேற்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில அவசர செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தலைவர் காதர் மொகிதீன், நிர்வாகிகள்.
சென்னை: ஆட்சியில் பங்கு கேட்பதற்கு அவசியம் ஏற்படவில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில அவசர செயற்குழுக் கூட்டம் சென்னை ராயபுரத்தில் நேற்று நடைபெற்றது.
தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்றார்.
இக்கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி மலருவதற்கு அயராது பாடுபடவேண்டும்; வந்தே மாதரம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்; இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரும் முதல்வரின் கோரிக்கைகளுக்கு வரவேற்பு; சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்; மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்பது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.எம்.காதர் மொகிதீன் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி மக்கள் போற்றக்கூடிய வகையில் சிறப்பாக நடைபெறுகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நல்லாட்சி தொடர வேண்டும். திமுக ஆட்சி செய்வது நாங்கள் பெற்ற அதிகாரமாக நினைக்கிறோம். ஆட்சியில் அனைத்து அதிகாரத்திலும் எங்களுக்கும் பங்கு கொடுத்திருக்கிறார்கள். புதியதாக பங்கு கேட்பதற்கு அவசியம் இல்லை.
காங்கிரஸ் கட்சியில் பலதரப்பட்ட கொள்கை உடையவர்களும், எண்ணக் கருத்து உடையவர்களும் இருப்பார்கள். அவர்கள் கூறும் கருத்துகள் ஊடகங்களில் வெளிவரத்தான் செய்யும். அதைக் கொண்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்த சலசலப்பும் கிடையாது. இது கருத்து பரிமாற்றமே தவிர, சலசலப்பு கிடையாது.
விஜய் இதுவரை தேர்தலில் நிற்கவில்லை. மக்களே ஜனநாயகத்தின் எஜமானர்கள். விஜய் சினிமா நடிகர் என்பதால் ரசிகர்கள் இருப்பார்கள். இதை வைத்துக்கொண்டு பெரிய மாற்றம் வரும் என்பது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.